Tamilnadu
இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதுபோல் புல்லட் பைக்குகளை திருடும் கும்பல்... வாட்ஸ்அப்பில் ஆர்டர்!
சில மாதங்கள் முன்பு எழும்பூர் காவலர் சரவணனின் புல்லட் வாகனம் திருடு போனது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் 60க்கும் மேற்பட்ட புல்லட் வாகனங்கள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் தலைமைக்காவலர் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வாட்ஸ் அப் குழு வைத்து புல்லட் திருடும் கும்பலை போலிஸார் கைது செய்தனர்.
சாப்ட்வேர் என்ஜினீயரான முகமது சஃபி, சிபி மற்றும் அமீர்ஜான் ஆகிய மூன்று பேரை கைது செய்த தனிப்படையினர், வாட்ஸ்அப் குழுவில் வாடிக்கையாளர் கேட்கும் விதத்தில் விரும்பும் ரகத்தில் புல்லட் பைக்குக்களை தேடிக் கண்டுபிடித்துத் திருடி விற்கும் இந்த கும்பல், சென்னையில் மட்டும் 68 புல்லட் பைக்குக்களை திருடியதைக் கண்டறிந்தனர்.
இரண்டு வருடம் புல்லட் பைக் திருடி தமிழகம் மற்றும் கேரளாவில் பைக் ரைடர்கள் போல் சென்று விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. வாகனத் திருட்டில் முக்கியக் குற்றவாளியான அப்துல்லாஹ் (எ) செல்வக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட முகமது சபி பயன்படுத்திய வாட்ஸ்அப் குழுவில் இருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.
சென்னையில் திருடப்படும் ராயல் என்ஃபீல்டு ரக இருசக்கர வாகனங்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெடுமாங்காடு, பளிச்சல் மற்றும் தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர்,மதுரை, தேனி போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த திருடர்களைப் பிடிக்கத் தனிப்படை போலிஸார் வியூகம் வகுத்தனர். வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் எண்ணையும் சைபர் கிரைம் போலிஸார் ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்தனர். குறிப்பாகப் போலி முகவரி பெயரில் பல எண்கள் வாங்கப்பட்டதால், அந்த எண்கள் செயல்படும் போது கிடைக்கும் சிக்னல்களை அடிப்படையாக வைத்து, இருப்பிடங்களைக் கண்டறிந்து, அந்த எண்ணை வைத்திருக்கும் நபர்களை போலிஸார் தேடத் தொடங்கினர்.
இந்நிலையில் சைபர் கிரைம் போலிஸாருக்கு கிடைத்த சிக்னல் அடிப்படையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான ஜமாலுதீன் மற்றும் சையது இப்ராகிம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான அப்துல்லா சென்னையில் திருடிய புல்லட் உடன் தஞ்சை செல்லும் வழியில் தங்கச் சங்கிலியைப் பறித்தபோது சிக்கி தஞ்சை டவுன் போலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் இருப்பதும் அவனது கூட்டாளிகளான அமீர் மற்றும் கதிரவன் இருவரும் புல்லட் வாகனங்களைச் சென்னையில் இருந்து திருடிச் செல்வதும் தெரியவந்தது.
மேலும் சையது இப்ராகிம் மற்றும் அப்துல்லா இருவரும் புல்லட் வாகனங்களைக் கொள்ளை அடிப்பதற்காகவே சென்னை கோட்டை ரெயில் நிலையம் அருகே சைனா பஜாரில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் செல்போன் கடை வைத்து, வாட்ஸ்அப் குழுவில் பெறும் ஆர்டரின் பேரில் இரவில் புல்லட்களை திருடி உள்ளனர். திருடுவதற்காக அமீர் மற்றும் முல்லை ஆகிய இருவரையும் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக சேர்த்து விட்டு, நள்ளிரவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புல்லட்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
அவர்களை விசாரணை செய்து புல்லட்கள் எந்தெந்த மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டன என்பதைக் கண்டறிந்து மீட்டு சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர். இதுவரை கேரளா மற்றும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 26 புல்லட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருடப்பட்ட மற்ற வாகனங்களையும் தேடும் பணியில் போலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிறையில் இருக்கும் அப்துல்லாவையும் போலிஸார் விசாரணை செய்து தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் குழுவில் இருக்கும் எண்கள் அனைத்தும் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்ட சிம்கார்டுகள் என்பதால், புல்லட் திருடும் கும்பல்களை கைது செய்வது போலிஸாருக்கு சவால் நிறைந்ததாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வாட்ஸ் அப் குழுவை ஆய்வு செய்யச் செய்யப் பல புல்லட் பைக்குகள் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிக்குவார்கள் என போலிஸார் அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!