Tamilnadu

ஆபத்தை உணராமல் குடிநீர்தொட்டி, மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் : சிக்னலால் சிக்கல்!

மதுரை மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் செல்போன் சிக்னல் சரிவரக் கிடைக்காததால் மாணவர்கள் வீட்டு மொட்டை மாடிகளில், மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கையடுத்து பள்ளிக் குழந்கைளுக்கு ஆன்லைன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பள்ளி ஆசியர்கள், பாடங்களை வீடியோவாக தயார் செய்து அனுப்புகின்றனர். சில பள்ளிகளில், ஜூம் செயலி போன்றவற்றில் நேரலையாக வகுப்புகளை நடத்துகின்றனர். அப்படி எடுக்கப்படும் வகுப்பில் பாடக் குறிப்புகளைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும், புத்தகங்களை பி.டி.எஃப் கோப்பாக திரையில் காண்பித்தும் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கின்றனர்.

அதேபோல் மாணவர்களுக்குத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டிய சூழல் கட்டாயமாகியுள்ளது.

இதற்கு லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போனுடன் வேகமான இன்டர்நெட் வசதியும் தேவைப்படுகிறது. பெற்றோர்கள் சிரமப்பட்டு இவைகளை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல கிராமங்களில் மாணவர்கள், ஆன்லைன் வகுப்பிற்கு மொபைல் சிக்னல் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் அருகே காட்டுப்பட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் அந்தப்பகுதியில் சிக்னல் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏறப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக இன்டர்நெட் சிக்னல் கிடைக்கும் இடங்களைத் தேடித் தேடி அலைகின்றனர்.

மதுரை அருகே சோழவந்தான் அருகே உள்ள கிராமப் பகுதியில் செல்போன் கோபுரங்கள் அதிகமாக இல்லாததால் கிராமங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை படிப்பதற்காக, இன்டர்நெட் சிக்னல் வேண்டி ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டிகளிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் ஏறிப் பாடங்களைக் கவனித்து வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்பார்ப்பு:

தினசரி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காவிட்டால் ஆசிரியர்கள் ஆப்சென்ட் போடுகின்றனர். பங்கேற்கவில்லை என்றால் முந்தைய நாள் வகுப்புகள் விட்டுப்போய்விடும். சக மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடியாததால் கேட்டும் தெரிந்து கொள்ள முடியாது. எனவே கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசு கிராமங்களுக்கு நல்ல இன்டர்நெட் வசதி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதே அனைத்து கிராமப்புற மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: ஆன்லைன் வகுப்பில் கற்க வழியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்!