Tamilnadu
கர்நாடக இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
"மாமன்னர் அசோகரின் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டுகளின் மாண்புகளை, கர்நாடக இசைப் பாடல்கள் வழியாக, பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் கர்நாடக இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் சீரிய பணி சிறக்கட்டும்!" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திக்குறிப்பில், “தமிழகத்தைச் சேர்ந்த புகழ்மிக்க கர்நாடக இசை அறிஞர் - ‘மகசேசே’ விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா, மாமன்னர் அசோகரின் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டுகளின் மாண்புகளை, கர்நாடக இசைப் பாடல்கள் வழியாக, பொதுமக்களுக்குக் கொண்டு செல்ல மேற்கொண்டிருக்கும் சீரிய முயற்சிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“போர் மூலம் தனது நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்வதில் ஈடுபாடு காட்டிவந்த அசோகர்; பிறகு எப்படி மனமாற்றம் அடைந்து, அன்பும், கருணையும் செறிந்த ஆட்சியை மக்களுக்கு வழங்கினார்” என்பது, இதுவரை நான்கு சுவர்களுக்குள்ளே எதிரொலித்த வகுப்பறைக் கல்வியாக இருந்தது; வரலாற்றுச் சுவடுகளாகக் காட்சியளித்தது. அவை தற்போது, டி.எம்.கிருஷ்ணா அவர்களின் மாபெரும் முயற்சியினால் மெல்லிசை வடிவம் பெற்று மக்களின் மனங்களில் தவழ்ந்துகொண்டே இருக்கப்போகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது.
டி.எம்.கிருஷ்ணா, அன்னைத் தமிழுக்கும் - அரிய மானுடக் கோட்பாடுகளுக்கும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும், மிகவும் நெருக்கமானவர். முத்தமிழ்ப் பேரவை சார்பாக “இசைச் செல்வம்” விருது வழங்கி சிறப்புச் செய்யப்பட்டவர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 40-ஆவது ஆண்டு இசை விழாவில், அந்த விருதினை வழங்கி நான் பேசும்போது, “இசையை ஓர் அறவழி ஆயுதமாக ஏந்தி, மக்கள் நலனுக்காக முன்னிற்கிறார். எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கே தன் நியாயக் குரலை ஒலிக்கக்கூடிய கிருஷ்ணனாக இருக்கிறார்” என்று பாராட்டினேன். அதுபோல்தான் இப்போதும் அசோக மன்னரின் காலத்தால் குறையாத கவின் சிறப்புகளை, இசை வடிவில், இந்நாட்டு மக்களின் செவிகளுக்கு விருந்தாக்கி, இதயங்களுக்கு மருந்தாக்குகிறார்.
இசையை, வெகுமக்கள் அறிந்து போற்றும் கலையாக, உள்ளடக்க மாற்றம் செய்யும் நுட்பமும், தனித்திறமையும் இயற்கையாகவே கைவரப் பெற்றிருக்கும் இவர், அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான புரட்சிகரமான முயற்சி, நம் நாட்டில் தற்போது நிலவும் சூழலுக்கு மிகவும் தேவையானது.
இதுகுறித்து இன்றைய “தி இந்து” ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள அவர், “வெறுப்புணர்வு, மதவெறி போன்றவற்றில் உலகம் சிக்குண்டு கிடக்கிற நேரத்தில், அசோகரின் கல்வெட்டுக்களும் – அவரது தேர்ந்த சொற்களும் விலைமதிப்பற்றவை” என்று கூறியிருப்பது; இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக இந்த இசைக் கலைஞர் நிற்கிறார் என்று உள்ளபடியே பெருமிதம் கொள்ள வைக்கிறது.
சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும், மதம் மற்றும் சமுதாய நல்லிணக்கமும் கொண்ட நமது நாட்டின் பாரம்பரியமான அடையாளங்களுக்கு, அணுவளவும் சேதாரம் வந்து விடக்கூடாது என்பதை; மனமாற்றம் பெற்ற அசோக மாமன்னரின் பண்புநலன்களை மையமாகக் கொண்டு, மக்கள் மன்றத்திற்கு எளிதில் சென்றடையும் இசை வடிவத்தில் இயற்றிடும் இந்த இசைப் போராளியின் இலட்சியமும் எண்ணமும் இனிதே வெற்றி பெறட்டும்!
டி.எம்.கிருஷ்ணாவின் இப்பணி மேன்மேலும் சிறக்க - மேலும் பல சாதனைகளைக் குவிக்க - தமிழ் மண்ணிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்த்துகிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!