Tamilnadu
பணம் பறிப்பதற்காகவே தமிழகத்தில் அதிகரிக்கும் ‘லெட்டர் பேட்’ கட்சிகள்.. உயர் நீதிமன்ற கிளை கண்டனம்!
தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ் நேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “திருச்சி அசூரில் இயங்கும் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம், சுமார் 1,500 சிலிண்டர்களை வைத்து, பாதுகாப்பற்ற முறையில் தினமும் 200 கிலோ ஆக்சிஜன் கேஸ் நிரப்பிவருகின்றனர். இதற்காக இந்நிறுவனம் உள்ளூர் பஞ்சாயத்தில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.
கொதிகலன் ஆய்வாளர், சுற்றுச்சூழல், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஊரின் மையப்பகுதியில் இந்நிறுவனம் இயங்குவதால் ஏதாவது விபத்து ஏற்பட்டால், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. கடந்த ஜனவரியில் குஜராத்தில் இதுபோன்ற சிலிண்டர் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. எனவே பாதுகாப்பற்ற இந்நிறுவனம் செயல்படத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், கொரோனா காலமான தற்போது ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ள வேளையில், மனுதாரர் சார்ந்த கட்சி, எதன் அடிப்படையில் இவ்வழக்கைத் தொடுத்தது எனக் கேள்வி எழுப்பினர்.
இதே போன்று தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் கட்சிகள் அதிகளவில் தொடங்கப்பட்டு, பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்டத்துறையை எதிர் மனுதாரராகச் சேர்த்து, இது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!