Tamilnadu

2 லட்சம் கூட செலவாகாத குடிநீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சம் செலவா? : அ.தி.மு.க MLA மீது ஊழல் குற்றச்சாட்டு!

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தொட்டியில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்தத் தொட்டி அமைக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி எம்.எல்.ஏ சு.குணசேகரன் திறந்து வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, திருப்பூர் 50ஆவது வார்டில் PREPOLY பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியுடன், மேடை கட்டுமான செலவையும் நீரேற்றம் செய்வதற்கான மோட்டார் பொருத்திய செலவையும் சேர்த்தால் அதிகபட்சம் ரூ.2 லட்சத்தைத் தாண்டாது. ஆனால் மூன்று மடங்கு கூடுதலாக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் செலவிடப்பட்டிருப்பதாக எழுதி வைத்திருக்கின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொட்டி அமைத்ததில் நடைபெற்றிருக்கும் ஊழலை அரசு நிர்வாகம் விசாரித்து குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஆளும் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட அரசின் திட்டங்களுக்கான செலவு செய்யும்போது, அதில் கமிஷன் பெற்று ஊழல் செய்வது வழக்கமாக மாறியுள்ளது.

குறிப்பாக, திட்டத்துக்கு ஒதுக்கிய தொகையில் 10 முதல் 30 சதவிகிதம் வரை கமிஷன் பெறுவதுதான் இது வரை நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது ஊழல் தொகையைத் தீர்மானித்து விட்டு அதில் ஒரு பகுதியில் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். அதற்கு சாட்சியாகத்தான் இந்த தொட்டி அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக தகவலறிந்த எம்.எல்.ஏ குணசேகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை எம்.எல்.ஏ என்ற முறையில் திறந்து வைத்ததாகவும் அங்கு செய்யப்பட்ட மொத்த பணிகளின் செலவு தான் 7.70 லட்சம் எனவும் கூறியுள்ளார்.

Also Read: தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!