Tamilnadu

சானிடைசர், சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கும் - எய்ம்ஸ் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிக்க தொடங்கிய நாளிலிருந்து முதலில் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளில், கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். இதனால் கிருமிகள் பரவலை தடுக்க முடியும் என்பதாலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா வைரசைப் பரவாமல் தடுக்கலாம் என்றும் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நுண்ணுயிர் தொடர்பான ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் நுண்ணுயிர் துறைத் தலைவர் ராம் சவுத்திரி மனித உடலில் வாழும் நுண் உயிரிகள் நோய் எதிர்ப்புச் சக்தியாக மாறி பல நோய்கள் நம்மைத் தாக்காமல் தடுப்பதாகக் கூறியுள்ளார்.

உதாரணமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் புகுந்து நோய் ஏற்படுவதை உடலில் உள்ள நுண்ணுயிர் மண்டலங்கள்தான் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சானிடைசர் மற்றும் சோப்பு அதிகம் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுப் பிற நோய்கள் நம்மை எளிதில் தாக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

தற்போது உள்ள நிலைமையில் கொரோனா தடுப்புக்கு சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க சானிடைசர், சோப்புகளைப் பயன்படுத்துவது தற்போது மக்களிடையே வழக்கமாக மாறியுள்ளது. இதனையடுத்து சந்தையில் அதன் விற்பனை மற்றும் விலை கிடுகிடு என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொரோனா முத்திரையால் தோல் பாதிப்பு?” : கை கருப்பாக மாறி ‘செப்டிக்’ ஆனதாக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு!