Tamilnadu
“நாள் முழுவதும் உழைக்கும் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை..” - ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து!
தமிழகம் முழுவதும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதுமட்டுமல்லாது, பல மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார்.
அதில், நல்லமனார்கோட்டை பகுதியில் சுமார் ஆயிரம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்ற நிலையில், வேடசந்தூர் தாலுகாவின் உதவி விவசாய அலுவலர் தெய்வேந்திரன் விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் அல்லாத தகுதியற்ற பலரை சேர்த்து முறைகேடாக வங்கி கடன் வழங்கியுள்ளார்.
மேலும், இந்த வங்கி கடன் வழங்குவதில் ஆளும் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் தலையிடும் உள்ளது. அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே முறைகேடாக லோன் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் திட்டத்தில் முறைகேடு செய்த வேடசந்தூர் உதவி விவசாய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவசாயிகளுக்காக மத்திய மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் என்ன? அதற்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது? எத்தனை விவசாயிகள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்றுள்ளனர்?
விவசாயிகளுக்காக மானியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது, விவசாயிகள்தான் பயன் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் நடைமுறை என்ன?
இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, பிரதம மந்திரியின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன?
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டத்தில் மோசடி செய்ததாக எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மேலும், விவசாயிகளுக்கான திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் விளம்பரப் படுத்தப் படுகிறதா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும், மத்திய மாநில அரசுகளின் விவசாயத் துறை செயலர்கள் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாக உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் உணவு ஊட்டும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல. நாள் முழுவதும் ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது.
வேலை ஆட்களுக்கு ஊதியம் என எதையும் கருத்தில் கொள்ளாது குறைந்தபட்ச விலை நிர்ணயம் என்பது வருந்தத்தக்கது என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய மாநில விவசாயத் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !