Tamilnadu
கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல 250 சவரன் நகை, 1 லட்சம் பணம், கார் கொள்ளை.. அதிமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது
பங்கு பிரித்துக் கொள்வதாகக் கூறி கொள்ளை அடித்ததை மொத்தமாக சுருட்டி கொண்டு தலைமறைவாக உள்ள உறவினரை போலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் சாரதாம்பாள் தெருவில் வசித்து வரும் முதியவர் நூருள் யாகூப்(71). இவரையும் இவர் மனைவியையும் கட்டிப்போட்டு 250 சவரன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் யாகூபின் உறவினரான மொய்தீன் என்பவருக்கு தொடர்பிருக்குமா என்கிற சந்தேகத்தில் பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மொய்தீனுடன் செல்போன் தொடர்பில் இருந்தவர்களை ஆய்வு செய்த போது சென்னையை சேர்ந்த அ.தி.மு.க பகுதி செயலாளர் ஆலன், போரூரை சேர்ந்த விஜய், வண்டலூரை சேர்ந்த சுகுமார், செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மகேஷ், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பிதுரை மற்றும் லோகேஷ்குமார், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த எல்லையப்பன், ஆகிய 8 பேரும் அடிக்கடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த 8 பேரின் எண்களும் அவர்களுக்குள் தொடர்ந்து இணைப்பில் இருந்ததை கண்டறிந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், யாகூபின் சகோதரர் ரூபில் என்பவருக்கு மொய்தீன் 40 லட்சம் ரூபாய் கடனாக வழங்கி இருந்த நிலையில், அவர் திருப்பி தராமல் காலம் தாழ்த்தவே கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை பெற ஆலன் உள்ளிட்ட 8 பேரையும் மொய்தீன் யாகூப் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் வெளியே 5 பேரை நிறுத்தி விட்டு மொய்தீன் உட்பட 4 பேர் மட்டும் உள்ளே சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி வீட்டிற்குள் நுழைந்த மொய்தீன் யாகூப் உள்ளிட்டோரை கட்டிபோட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலன் உள்ளிட்டோர் ஏன் இவ்வாறு செய்கிறாய் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு மொய்தீன் இவர்களிடம் இப்படி பேசினால்தான் வசூல் செய்யமுடியும் என கூறி, வீட்டின் வெளியே நின்றவர்களிடம் புறப்பட்டு செல்லக் கூறிவிட்டு, நகை பணம் பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி உள்ளார்.
கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய மொய்தீன் அதை மறைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யலாம் என கூறியதை நம்பி 8 பெரும் மொய்தீனின் வலையில் விழுந்துள்ளனர். பின்னர் நகை பணம் உள்ளிட்டவற்றை பங்கிட்டுக்கொள்ளலாம் என ஆசை காட்டிய மொய்தீன் 8 பேரையும் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் தான் செல்போன் சிக்னலை வைத்து 8 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பட்டா கத்தி இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கொள்ளையடித்த பொருட்கள் மொத்தத்தையும் சுருட்டிக்கொண்டு மொய்தீன் தலைமறைவாக இருப்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!