Tamilnadu
“விவசாயிகள் புறக்கணிப்பு : லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்” - வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்!
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக 149 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை தாமதமாக கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், ஆயிரக்கணக்கான மூட்டைகள் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்காக தேங்கிக் கிடக்கின்றன.
அவ்வப்போது பெய்த மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் வீணாகி மூட்டைகளிலுள்ள நெல் மணிகள் முளைத்துவிட்டன. தரம் குறைந்த நிலை என்று கூறி இதனை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலைய ஊழியர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து, இன்று விவசாயிகள் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிகளில் நெல் மூட்டைகளை அடுக்கி முளைத்த நெல்மணிகளை வீதிகளில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மூலம் அதிக முறைகேடுகள் நடக்கின்றது. மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது, இடைத்தரகர்களாக செயல்படும் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக சிறு, குறு விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் அவர்களை மிரட்டுவது, விரட்டியடிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்காண மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். நாளொன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுவதால், உண்மையான விவசாயிகள் விளைவித்த நெல்லை எடுக்க மறுத்து “பழைய நெல், நெல்லில் தரம் இல்லை” என்று கூறி அலைய விடுகின்றனர்.
இதுகுறித்து நாகை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு விவசாயிகள் புகார் அனுப்பியுள்ளோம். விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!