Tamilnadu
புல்லட் பைக்குகளை குறிவைத்து லாவகமாக திருடும் கில்லாடி கும்பல்.. வாட்ஸ் அப் குரூப் மூலம் விற்றது அம்பலம்!
சென்னை எழும்பூரில் கடந்த 6 ஆம் தேதி எழும்பூர் தலைமை காவலர் குமரவேல் என்பவரின் புதிய புல்லட் வாகனம் திருடு போனது. இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போன்று நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவரது புல்லட் 19-09-2020 அன்று திருடு போனது. இது குறித்து பார்த்திபன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போன்று சென்னையின் பல்வேறு இடங்களில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்படும் புல்லட்டுகளை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் இரவு நேரத்தில் திருடி வந்துள்ளது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், அபிராமபுரம், சேத்துபட்டு, ராயபேட்டை, எழும்பூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதனால் கொள்ளையர்களை பிடிக்க போலிஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமை காவலர் குமரவேலின் இருசக்கர வாகனம் கல்பாக்கம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட அனைத்து புல்லட் வாகனங்களும் கல்பாக்கம் வரை சென்று வேறொரு நபருக்கு கைமாற்றி கொடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் தொடர்பு கொள்ளும் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் ஒரே கும்பல்தான் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் (2-10-2020) அதிகாலை நுங்கம்பாக்கம் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக புல்லட் வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சஃபி (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த புல்லட், பார்த்திபன் என்பவரது வாகனம் என்பதும், சஃபி ஒரு புல்லட் திருடன் என்பதும் தெரியவந்தது.
தனது நண்பர்களுடன் இணைந்து புல்லட் மற்றும் பல்சர் பைக்குகளை திருடி அவற்றை குறைவான விலைக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இவர்களது நண்பர்கள் புல்லட் வாகனத்தை இந்த கும்பலிடம் ஆர்டர் கொடுப்பதும், ஆர்டர் கொடுக்கும் வாகனத்தை சென்னையில் தங்கி நோட்டமிட்டு இரவு நேரத்தில் திருடி கொண்டு கல்பாக்கம் வரை சென்று அங்கு கை மாற்றி விற்பனையில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சஃபிக்கை வைத்து இவரது கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சிபி (23) மற்றும் விருதுநகரை சேர்ந்த அமீர்ஜான் (36) ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேரும் இணைந்து சுமார் 25 க்கும் மேற்பட்ட புல்லட் வாகனங்களை சென்னையில் திருடியிருப்பது தெரியவந்தது.
மேலும் விருதுநகரை சேர்ந்த சிபி என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி இரண்டு மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் புல்லட்களை லாவகமாக உடைத்து திருடுவதில் கில்லாடி என்பதும் தெரிய வந்தது. அதே போல கேரளாவை சேர்ந்த அமீர்ஜான் பல்சர் பைக்குகளை லாவகமாக உடைத்து திருடுவதில் கில்லாடி என்பதும் இவர் மீது கேரளா மற்றும் தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமிருந்தும் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள புதிய 7 புல்லட் உட்பட 10 இருசக்கர வாகனத்தை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களின் கூட்டாளிகளான மூன்று நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!