Tamilnadu

“டெல்டா பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்” : துரைமுருகன் வலியுறுத்தல்!

"டெல்டா பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முழுவீச்சில் திறக்கவும் - ஈரப்பதத்தில் சலுகை அளித்து, போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட வேண்டும்" என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்காக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா பகுதியில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை இதுவரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்குத் துணை நின்று- ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, 2020-21-ஆம் ஆண்டிற்கு ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு வெறும் 53 ரூபாய் மட்டும் குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுத்துள்ள அ.தி.மு.க. அரசு இப்போது கொள்முதல் நிலையங்களையும் குறித்த காலத்தில் திறக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 1973 சம்பா சீசனில் முதன்முதலில் துவக்கி வைத்த இந்த நேரடிக் கொள்முதல் நிலையங்கள் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் சம்பா நெல் கொள்முதல் செய்வதற்கு டிசம்பர் 16 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரையும் நெல் கொள்முதல் செய்யும் வகையில் “நேரடி கொள்முதல் நிலையங்கள்” திறக்கப்படும். ஆகவே குறுவை சாகுபடி நெல் கொள்முதல் செய்வதற்கு அக்டோபர் 1-ஆம் தேதி - அதாவது நேற்றைய தினமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை திறக்கவில்லை. நாளைக்கும் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை.

வழக்கமாக பராமரிப்பிற்காக செப்டம்பர் 28 அல்லது 29-ஆம் தேதிகளில் ஒரு நாள் மூடப்படும் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் உடனே அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த முறை செப்டம்பர் 23-ஆம் தேதி, 25-ஆம் தேதி வாக்கிலேயே மூடப்பட்டு இதுவரை திறக்கவில்லை. கனமழை பெய்து - வயல்கள் வெள்ளக்காடாக மாறி மிதக்கின்ற இந்தச் சூழலில் - அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் பல இடங்களில் முளைத்துப் போய் விட்டன.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் - குவித்து வைக்கப்பட்டுள்ள அரசின் நெல்லில் உள்ள அடிப்பகுதிகளும் முளைத்து விட்டன. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகளுக்கும் பேரிழப்பு; அரசுக்கும் நஷ்டம் என்ற நிலை தற்போது காவிரி டெல்டா பகுதியில் நிலவி வருகிறது.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள எதிர்பாராத இந்தப் பேரிடரை முன்கூட்டியே உணர்ந்து காவிரி டெல்டா கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூத்த மண்டல மேலாளர்களிடம் முறையிட்டு - உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தியும் இன்றுவரை திறக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக மன்னார்குடி கழக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கழகத் தலைவரின் அனுமதி பெற்று போராட்டமே நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும் விவசாயிகளின் வலியை - வேதனையை இந்த அ.தி.மு.க. அரசு உணரத் தவறிப் பொறுப்பற்ற முறையில் முடங்கிக் கிடக்கிறது. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சரோ, உணவுத்துறை அமைச்சரோ இது பற்றிக் கண்டுகொள்ளவில்லை.

முதலமைச்சரோ வேறு பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தற்போது விவசாயிகளைப் பற்றிச் சிந்திக்க - அக்டோபர் 7-ஆம் தேதி வரை நேரமில்லை! ஒட்டுமொத்தமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசு நிர்வாகம் இன்றைக்கு விவசாயிகளுக்கு- குறிப்பாகக் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆபத்தாக இருக்கிறது. கடன் வாங்கி - வியர்வை சிந்த உழைத்து - அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் - பேரிழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே முதலமைச்சர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, நேரடிக் கொள்முதல் நிலையங்களை நாளையே காவிரி டெல்டா பகுதிகளில் முழு வீச்சில் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், 17 சதவீத ஈரப்பதம் என்று நெல்லை நிராகரிக்காமல் - ஈரப்பதத்தில் சலுகை அளித்து - தினமும் 1000 குவிண்டால்கள் அளவிற்காவது போர்க்கால வேகத்தில் குறுவை நெல்கொள்முதலைச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நேரடிக் கொள்முதல் நிலையங்களை உத்தரவிட அ.தி.மு.க.வின் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ - ஏன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையோ கூட்டத் தேவையில்லை. அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பித்தால் போதும் என்பதை உணர்ந்து முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மண்ணைக் காக்கும் போரில் எங்கள் மீது பாய்ந்துள்ள இந்த வழக்குகள் தூசுதான்” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!