Tamilnadu
“மண்ணைக் காக்கும் போரில் எங்கள் மீது பாய்ந்துள்ள இந்த வழக்குகள் தூசுதான்” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
மத்திய பா.ஜ.க அரசு அரசு வேளாண் அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க அரசு அறிவித்தது. இந்நிலையில், பொது இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி, கிராம சபை கூட்டத்திற்கு மாற்றாக ‘மக்கள் சபை கூட்டம்’ நடத்துமாறு தி.மு.க ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து தி.மு.க சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மக்கள் சபை கூட்டங்களில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள, புதிய மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றின.
அதேப்போல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற ‘மக்கள் சபையில்’ பங்கேற்று அந்தக் கிராம மக்களிடையே உரையாற்றினார்.
பின்னர் அந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த மாநில அரசைக் கண்டித்தும் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல கிராமங்களில் தி.மு.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் மீது அ.தி.மு.க அரசு வழக்குப் பதிவு செய்து வருகிறது. அ.தி.மு.க அரசின் இந்த அராஜக போக்கிற்கு ஜனநாயக அமைப்பினர், விவசாய சங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கிராம சபை நடத்தினால் வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்று பயந்து தடை போட்டார்கள்!
தடையை உடைத்தது மக்கள் சக்தி!
'மக்கள் சபை' என்ற பெயரால் தமிழகம் முழுவதும் எல்லாக் கிராமங்களிலும் திரண்ட மக்கள் திரளைப் பார்த்து மத்திய, மாநில அரசுகளே என்ன சொல்கிறீர்கள்?
விவசாயிகளுக்காக அணிதிரண்ட எங்கள் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. மண்ணைக் காக்கும் போரில் இந்த வழக்குகள் தூசுதான்! மக்கள் சக்தி மேலும் திரண்டால் இந்தச் சட்டங்கள் தூள்தூளாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்