Tamilnadu

கைதிகளை மணமுடிக்க பெண்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறதா? - ஐகோர்ட்டில் தேசிய மகளிர் ஆணையம் பதில்!

தண்டனை கைதிகளாக இருப்பவர்களுக்கு விடுப்பு அல்லது பரோல் கோரி மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோலில் வந்து செல்லும் ஆயுள் தண்டனை கைதிகளை திருமணம் முடிக்கும் பெண்கள் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

ஆயுள் தண்டனை கைதிகளை மணமுடிக்கும் விவகாரத்தில், மணமகளின் ஒப்புதல் பெறப்படுகிறதா அல்லது பல்வேறு மத மற்றும் சாதி ரீதியிலான நடைமுறை காரணமாக கட்டயபடுத்தபடுகிறார்களா என ஆராயும் நடைமுறையை உருவாக்க வேண்டுமென தெரிவித்து, தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலாளர் பிரீத்தி குமார் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேசிய மகளிர் ஆணைய சட்டப்படி, ஆணையம் என்பது ஆலோசனைக்குழு மட்டுமே என்றும், அரசுக்கு உத்தரவிடும் அமைப்பு அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்றும், தண்டனைக்கு உள்ளானவரை பெண்கள் திருமணம் செய்ய எந்த சட்டமும் தடையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் தண்டனை கைதியை திருமணம் முடிக்கும் பெண்ணிடம் ஒப்புதல் பெறப்பட்டதா அல்லது மதம் மற்றும் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக நடத்தப்படுகிறதா என விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Also Read: “இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பெற்றோர்களே காரணம்” - சென்னை ஐகோர்ட் அதிருப்தி!