Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகர் (கடலூர் ), சிதம்பரம் தலா 13 செமீ, கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 11 செமீ, கொத்தவச்சேரி (கடலூர்), 9 செமீ, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 8 செமீ, வானமாதேவி (கடலூர்), தொழுதூர்(கடலூர்), கங்காவல்லி (சேலம்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி ), தழுத்தலை (பெரம்பலூர் ) தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் கடல் உயர் அலை முன்னறிவிப்புகள் என ஏதுமில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு (பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் (LA-NINA, IOD) ) அடிப்படையில் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.