Tamilnadu
“ஏன் இந்த குழப்ப விளையாட்டு?” - பள்ளிக்கல்வித்துறை குளறுபடி குறித்து பழனிசாமியை விளாசும் தங்கம் தென்னரசு!
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்தக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் சூழலில் பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து குழப்பமான அறிவிப்புகள் வெளிவருவதும், ரத்து செய்யப்படுவதும் தொடர்ந்து வருவது மாணவர்களையும், பெற்றோர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், "கல்வித்துறையில் ‘துக்ளக் தர்பார்' நடைபெறுவது, முதலமைச்சருக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கலாம்; மக்களுக்கோ அது உயிர் வாதை!" எனக் குறிப்பிட்டு விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அறிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகப் பள்ளி மாணவர்கள் தங்களின் ‘ சந்தேகங்களைப்’ போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதியன்று தொடங்கப்படும் எனத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கடந்த 24-09-2020 அன்று ஓர் அரசாணையினைப் பிறப்பித்த நிலையில், இன்று (29-09-2020) செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, மேற்குறித்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும்; பள்ளிகளைத் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசித்துப் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கின்றார்.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை என்பது, பள்ளிக் 'குழப்பத்’ துறையாகவே மாறிவிட்டது என்பதற்குப் பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் விடுத்த அறிவிப்புகளும், அதற்கு மறுநாளே விடுத்த மறுப்பு அறிக்கைகளுமே சாட்சியங்களாக இருக்கின்றன.
இந்தக் குழப்ப விளையாட்டில், தான் எவருக்கும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், முதலமைச்சர் தானும் களத்தில் குதித்து, ஐந்து நாட்களுக்கு முன்னர் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையை இன்றைக்கு நிறுத்தி வைத்து, மருத்துவக் குழு ஆலோசனைக்குப் பின்னர் வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்தும், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றார்.
கொரொனா நோய்த்தொற்று சற்றும் குறையாத சூழலில், தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தீர ஆலோசிக்காமல் மேற்கொள்ளும் அவசர முடிவுகளும்; அதில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களும்; அவற்றால் விளையும் குழப்பங்களும், தமிழ்நாட்டு மாணவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும், ஆசிரிய சமுதாயத்தையும் எவ்வாறெல்லாம் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்குகின்றன என்பதைக் கழகத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்கள் விரிவாகச் சுட்டிக்காட்டியதோடு, ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பத்திரமாக வீட்டுக்குத் திரும்புவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியும் அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தார்கள்.
தலைவர் அவர்களின் அறிக்கைக்குப் பின்னர் விழித்துக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் அரசு, இப்போது மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுத்தபின் பள்ளிகளைத் திறப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஆயினும், ஏன் முன்னரே மருத்துவக் குழுவுடன் கலந்துபேசி உரிய முடிவெடுக்காமல், அவசரம் அவசரமாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் தொடங்குவது குறித்து தலைமைச் செயலாளர் மூலம் அரசாணை வெளியிடப்பட்டது என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிடப்பட வாய்ப்பில்லை என்ற நிலையில், ஏன் இவ்வளவு குழப்பங்கள் என்ற கேள்வியும் மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.
பொதுத்தேர்வுகளை நடத்துவதில் தொடங்கிப் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாகவும், இந்தக் கல்வியாண்டுக்குரிய பாடத்திட்டங்களை இறுதி செய்வதிலும் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை செய்யும் குழப்பங்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்டி, தெளிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் மாணவர்கள் கல்வி பயிலும் நல்ல சூழலைத் தமிழகத்தில் உருவாக்க அரசு உடனே முன்வரவேண்டும்.
கல்வித்துறையில் இத்தகைய ‘துக்ளக் தர்பார்' நடைபெறுவதென்பது, முதலமைச்சருக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கலாம்; மக்களுக்கோ அது உயிர் வாதை என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?