Tamilnadu
ஆவின் நிர்வாகத்தில் பரவியுள்ள ஊழலை அகற்றிட முதல்வர் எடப்பாடி முன் வருவாரா?: பால் முகவர்கள் சங்கம் கேள்வி!
ஆவினின் இதயத்தை அரிக்கும் ஊழல் புற்றுநோய்" ஆவினைக் காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எனும் அறுவைச் சிகிச்சை செய்யுங்கள் தமிழக முதல்வரே." என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “1996ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் "காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகிப் போய் விட்டது" என சட்டப்பேரவையிலேயே பேசினார். ஆனால் தற்போது தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினின் இதயத்தில் முற்றிலுமாக ஊழல் புற்றுநோய் தாக்கி, மற்ற உறுப்புகளையும் (ஒட்டுமொத்த துறைகளை) அழிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது என்பது மறுக்க முடியாத அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
ஏனெனில் தற்போது பால்வளத்துறையின் கூடுதல் துணைப்பால் ஆணையராக இருக்கும் திரு. கிறிஸ்துதாஸ் அவர்கள் துணைப்பால் ஆணையராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவரது உறவினர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த 1) D.பினுசா, 2) W.N.ஜெனுசா, 3) W.N.பினுசா, 4) மெர்பின் ஜோஸ், 5) ஆலன் பெனிட்டன், 6) சுனில், 7) சிவகார்த்திக், 8) சக்தி கோகுல் ஆகியோரிடம் தலா 15லட்சம் ரூபாய் கையூட்டு பெற்று கொண்டு ஆணையர் அலுவலகத்தில் பணி நியமனம் செய்து பின்னர் அவர்களை திருநெல்வேலி மாவட்ட துணைப்பால் ஆணையர் அலுவலகத்திற்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்துள்ளதோடு, அதன் பிறகு மேற்கண்ட எட்டு பேரில் D.பினுசா, W.N.ஜெனுசா, W.N.பினுசா, மெர்பின் ஜோஸ், சிவகார்த்திக் ஆகிய ஐந்து பேரை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சரண்டர் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வேலூர் மாவட்டம், காவனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் திரு. மாணிக்கவேல் அவர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன், மா.தமிழரசன், மா.ராஜலட்சுமி, ஆர்.உமாலட்சுமி ஆகிய நான்கு பேர் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு தமிழகம் முழுவதும் ஆவினில் இது வரை சுமார் 170 க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறியும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும் கையூட்டு பெற்று கொண்டு பணி நியமனம் செய்துள்ளதால் அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறைக்கும், தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறை செயலாளர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கும் பால்வளத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது இது வரை எந்த ஒரு நடவடிக்கையோ, விசாரணையோ நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பது எங்களது சந்தேகத்தை உறுதி செய்வதாக இருக்கிறது.
எந்தவொரு பணி நியமனமும் வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக இல்லாது, போலி முகவரிகள் பெற்றுக் கொண்டு அடிப்படை ஊழியர்கள் (Basic Servants) நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அரசு ஊழியர்கள் அடிப்படை விதிகள் மீறி அடிப்படை ஊழியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்து, பணி ஒப்படைப்பு செய்த்துள்ளது கடுமையான விதி மீறல்கள் என்பதை பால்வளத்துறை ஆணையர்களாக இருந்த சி.காமராஜ் ஐ.ஏ.எஸ் மற்றும் தற்போதுள்ள வள்ளலார் ஐ.ஏ.எஸ் ஆகியோர் அனுமதித்துள்ளது பால்வளத்துறையில் வியாபித்துள்ள இமாலய ஊழல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
மேலும் நாகர்கோவில் மாவட்டத்தில் 2015 - 2018 காலகட்டத்தில் திரு. கிறிஸ்துதாஸ் அவர்கள் துணைப் பதிவாளராக பணியாற்றிய போது அவருக்கு கீழ் உதவியாளராக இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த திருமதி. சுசீலா அவர்களுக்கு பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால் அந்த பெண் ஊழியருக்கு 20க்கும் மேற்பட்ட முறை மெமோ மேல் மெமோ கொடுத்தும் கோபம் தனியாமல், அவரை பழிவாங்கும் நடவடிக்கையாக திருநெல்வேலிக்கு பணி மாற்றம் செய்தும், அவரது பதவி உயர்வை தடுத்து நிறுத்தியும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, மனரீதியாக நெருக்கடி கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி அந்த பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த நிலையில் துறை சார்ந்த பாலியல் வழக்கு என்பதால் கன்னியாகுமரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆவின் நிறுவனத்தில் விசாகா கமிட்டி மூலம் தீர்வு காண மனு செய்து பரிகாரம் தேடிக் கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அவரும் அது தொடர்பாக பால்வளத்துறை செயலாளருக்கு முறையிட்டும் இன்றைய தேதி வரை ஆவினில் விசாகா கமிட்டி அமைக்கப்படாததோடு, தன் மீது பாலியல் வழக்கு பதிய காரணமான நாகர்கோவில் துணைப் பதிவாளர் அலுவலகத்தையே இழுத்து மூட வைத்திருக்கிறார் கிறிஸ்துதாஸ் அவர்கள்.
நாகர்கோவில் மாவட்டத்தில் துணைப் பதிவாளராக பணியாற்றிய போதே கிறிஸ்துதாஸ் அவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் அவர் மீது முன்னாள் நிர்வாக இயக்குனரும், பால்வள ஆணையாளராக இருந்தவருமான திரு. சுனில்பாலிவால் அவர்களால் 17(A), 17(B) Charge (கோப்பு ந.க.எண் 24610/B3/2010, 15246/B3/2010) போடப்பட்ட நிலையில் அவருக்கு பின் வந்த திரு. காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் கூட்டு சதி செய்து 17(A), 17(B) Charge (கோப்பு ந.க.எண் 24610/B3/2010, 15246/B3/2010) ஆகியவற்றை ரத்து செய்ததோடு துணைப் பதிவாளராக இருந்த கிறிஸ்துதாஸ் அவர்களை பிப்ரவரி 2019ல் பால்வளத்துறையின் துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கிட காரணமாகவும் இருந்திருக்கிறார்.
அத்துடன் அரசு பணியில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு குறைவாக அப்பணியில் இருந்தால் பதவி உயர்வு வழங்கக்கூடாது என்கிற விதிகள் இருக்கும் சூழலில் அவர் அப்பொறுப்பிற்கு வந்த சில மாதங்களிலேயே பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராக பதவி உயர்வு வழங்கிட திரு. காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் பரிந்துரை செய்ததால் அவருக்கு விதிமுறைகளை மீறி துணைப்பால் ஆணையராக, பிப்ரவரி 2019ல் பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் 06.01.2020 பால்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமித்து கிறிஸ்துதாஸ் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது இதில் சுமார் 40லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கைமாறி இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதோடு ஆவின் நிர்வாகம் ஊழல்களால் நிரம்பி வழிவதற்கு இது உதாரணமாகவும் இருக்கிறது.
மேலும் திரு. கிறிஸ்துதாஸ் கடந்த மே மாதமே ஓய்வு பெற வேண்டிய சூழல் வந்த போது ஈராண்டு பணி நீட்டிப்புக்கு பகிரங்க பிரயத்தனம் செய்தார். ஆனால், கொரோனா காரணமாக ஓராண்டு மட்டுமே தமிழ்நாடு அரசால் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தன் மீதான ஊழல் புகார்கள் ஏராளமாக குவிந்து வருவதால் வழக்குகள், விசாரணைகள் வருவதற்கு முன் ஓய்வு பெற்று விட திட்டமிட்டு அதற்காக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து, அவசர, அவசரமாக பணியிலிருந்து விடுவிப்பு பெற்றிடும் நடவடிக்கையில் இருப்பதும் இவரின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ள முகாந்திரங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களால் தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பாக உருவாக்கப்பட்ட ஆவின் நிறுவனத்தில் கிறிஸ்துதாஸ், மருத்துவர் அலெக்ஸ், துணைப்பால் ஆணையர் ராமச்சந்திரன் போன்ற ஊழல் பெருச்சாளிகள் ஆக்ரமித்துள்ளதாலும் அவர்களுக்கு தலைமை அதிகாரியாக இருக்கும் தற்போதைய நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐஏஎஸ் அவர்களுக்கும் சேர்த்து கப்பம் கட்ட தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பாலை திருடி விற்பனை செய்து விட்டு அதில் பல்வேறு கலப்படங்களைச் செய்வது, கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்களிடம் தரமற்ற பாலினை கொள்முதல் செய்வது என பல முறைகேடுகளை செய்து வருகின்றனர். அவர்கள் கட்டும் கப்பத்திற்கு பலனாக பால் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை உயரதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்து வருகின்றனர்.
எனவே விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்ட பால்வளத்துறையின் கூடுதல் ஆணையர் கிருஸ்துதாஸ், மருத்துவர் அலெக்ஸ் உள்ளிட்டோரின் பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு அவர்களை பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், துணைப் பதிவாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. காமராஜ் ஐஏஎஸ், இந்நாள் நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் ஐஏஎஸ் மற்றும் பால்வளத்துறை கூடுதல் ஆணையர் கிறிஸ்துதாஸ் ஆகியோரது காலகட்டத்தில் பால்வளத்துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்திட உடனடியாக விசாகா கமிட்டி அமைப்பதோடு தற்போது திருநெல்வேலி மாவட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் திருமதி. சுசீலா அவர்களின் புகார் மீது விரைவாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, கூடுதல் பால்வள ஆணையாளர் திரு. கிறிஸ்துதாஸ் அவர்களால் பழிவாங்கப்பட்ட அவருக்கு உரிய நிவாரணம் கிடைத்திடவும் ஆவண செய்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து மீட்டெடுத்து பால்வளத்துறையை காப்பாற்ற முடியும். தான் ஒரு விவசாயி என கூறி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விவசாய பெருமக்களின் உழைப்பால் உருவான கூட்டுறவு நிறுவனமான ஆவினை காத்திட எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல், தயவு தாட்சண்யம் பாராமல் ஊழல் புற்றுநோயை அகற்றிட அதிரடி நடவடிக்கை எனும் அறுவைச் சிகிச்சை செய்திட முன் வர வேண்டும்.
ஆவினில் மேல்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை பரவியுள்ள ஊழல் புற்றுநோயை அகற்றிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன் வருவாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!