Tamilnadu

"பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல” - துரைமுருகன் சாடல்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார்.

அப்போது துரைமுருகன் எம்.எல்.ஏ பேசுகையில், “விவசாய சட்டத் திருத்த மசோதா குறித்துப் பேசுபவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. அப்படி ஓர் ஓட்டையுள்ள, குழப்பமான சட்டம். அவை சட்டமாக்கப்பட்ட விதமும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரண்பட்டது.

பீகார் உள்பட பல மாநில முதல்வர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளனர். இதனால், பயந்துபோய்தான் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி உள்ளனர். ஒளிவுமறைவு இல்லாத சட்டம் என்றால் ஏன் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

ஜியோ வந்த பிறகு பி.எஸ்.என்.எல் இருக்கும் இடமே தெரியாமல் போனது. அதுபோலத்தான் இந்தச் சட்டமும் இருக்கும். மார்க்கெட் கமிட்டி முறை முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிடும். சில பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து எடுப்பார்கள். பின்னர், பொருட்களைப் பதுக்கி தனிப்பட்ட முதலாளிகள் லாபம் பார்க்க இந்தச் சட்டம் உதவும்.

இதனால், விவசாயிகள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவேதான் இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி தி.மு.க, கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்” எனப் பேசினார்.

Also Read: ஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்