Tamilnadu

5 மாதங்களுக்குப் பிறகு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மீண்டும் திறப்பு : பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே 5ம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சி.எம்.டி.ஏ நிர்வாகம் தரப்பில் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் மொத்த வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி அங்காடிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக திருமழிசை மார்க்கெட்டில் இயங்கிய 194 காய்கறி கடைகள் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டில் திறக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக கோயம்பேடு மொத்த வியாபாரிகளை மட்டும் அனுமதிக்கும் வகையில் 600 சதுர அடி கடைகள் தொடங்கி 1200 சதுர அடி கடைகள் வரை மட்டுமே திறக்கப்பட உள்ளது. மார்க்கெட் திறப்பதற்கு முன்பே கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சி.எம்.டி.ஏ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சரக்கு இறக்க வரும் லாரிகள் 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே மார்க்கெட்டிற்கு அனுமதிக்கப்படும். அதேபோல், ஒரு கடைக்கு வெர்னாட்ஸ்கி லாரிகள் மட்டுமே ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படும்.

திருமழிசை மார்க்கெட்டில் பின்பற்றியது போல காய்கறிகள் வாங்க மொத்த விலை வியாபாரிகள் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் காய்கறி வாங்க வரும் மொத்த வியாபாரிகளின் வாகனங்கள் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைவதை தவிர்க்கும் வகையில் ( buffer parking அமைக்கப்பட்டு ) வாகனங்கள் பூ மார்க்கெட் அருகில் உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டு வரிசையாக உள்ளே அனுமதிக்கப்படும் என சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மக்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக காய்கறி மார்க்கெட்டிற்கு செல்வதற்காக நான்கு நுழைவாயில்கள் மட்டுமே திறக்கப்பட உள்ளது. வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் அங்காடி பகுதிகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

(கேட் no :14,7,9,11) மட்டுமே திறந்திருக்கும். அதேபோல் முறையான தனிமனித இடைவேளையில் பின்பற்ற கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சிஎம்டிஏ தரப்பில் அறிவுறுத்தப்படும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சாலையோர விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அங்காடிகளுக்கு வெள்ளிக்கிழமை கடைகளை சுத்தம் செய்ய மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அங்காடியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எளிதில் அடையாளம் காணும் வண்ணம் பின்னலாடை வழங்கப்பட உள்ளது.

கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வண்ணம் மார்க்கெட் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதேபோல் அங்காடி உள்ளே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சானிடைசர், முக கவசம், உடல் வெப்ப பரிசோதனைக் கருவி கட்டாயமாக்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்துக் கழிவறைகளும் முறையாக பராமரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழும பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.