Tamilnadu
நேற்று ICF தொழிற்சாலையில் தீ விபத்து.. இன்று பாதுகாப்பு பணியில் இருந்த RPF வீரர் தற்கொலை : நடந்தது என்ன?
சென்னை வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலையில் ஐ.சி.எஃப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
ரயில் பெட்டிகள் தயாரிக்க தனித்தனியாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது எலக்ட்ரிக்கல், பெயிண்டிங் என அனைத்து பணிகளுக்கும் ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தயாரிக்கப்படும்.
ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகமானது எண் 54 என்ற சேமிப்பு கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இந்த குடோனில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் வில்லிவாக்கம், அண்ணா நகர், செம்பியம் , எழும்பூர் உட்பட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டன.
தகவலறிந்த தீயணைப்புதுறை இயக்குநர் சைலேந்திரபாபு, தீயணைப்புதுறை இணை இயக்குநர் ப்ரியா ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து அவர்கள் மேற்பார்வையில் சுமார் 6 மணி நேரம் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின என்பது குறித்து ஐ.சி.எஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஐசிஎப் நிர்வாக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தீப்பற்றிய குடோனில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் காஜாமைதீன் (57) என்பவர் இன்று காலை ஐம்சி.எஃப்க்கு வெளியே உள்ள மரத்தில் தனது சட்டையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீ விபத்து நடந்ததற்கு விசாரணை என்கிற பெயரில் ஏதேனும் உயரதிகாரிகள் இவருக்கு மன அழுத்தம் கொடுத்தார்களா ? அல்லது தீ விபத்து நடந்ததில் இவருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அல்லது பயத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் ஐ.சி.எஃப் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.சி.எஃப் குடோனில் தீ பற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் எரிந்த நிலையில் இன்று அந்த குடோனின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !