Tamilnadu

தமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த யானை தாக்குதலில் இரண்டு பேர் பரிதாப பலி!

கோவை மாவட்டம் காரமடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மனோஜ் என்ற ஞானபிரகாசம் (வயது 31) டிராக்டர் ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அருண்குமார் (32).நேற்று இவர்கள் இருவரும் போப்நாரி பகுதியில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டுச் செல்லும் வழியில், போப்நாரி மூணுகுட்டை பிரிவு கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது புதர் மறைவில் இருந்த யானை இருசக்கர வாகனத்தை வழிமறித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருண்குமார் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியுள்ளார். இருப்பினும் பின்னால் அமர்ந்திருந்த ஞானபிரகாசதை தும்பிக்கையால் பிடித்து இழுத்து கீழே தள்ளிய யானை அவரை தந்தத்தால் குத்தியும், காலால் மிதித்தும் தாக்கியுள்ளது. இதனால் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த ஞானபிரகாசம் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அந்த இடத்திலிருந்த யானையை விரட்டிவிட்டு ஞானபிரகாசத்தை மீட்டபோதே அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் சுரேஷ் மற்றும் காரமடை போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஞானபிரகாசத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பருத்திகொல்லி பகுதியில் முருகன் என்றவர் வேர்க்கடலை விவசாயம் செய்துள்ளார். இதனால் இரவு நேரங்களில் வரும் காட்டுப்பன்றிகளை விரட்டக் காவலுக்காக முருகனின் மனைவி மற்றும் மகள் சோனியா ஆகியோர் விவசாய நிலத்தில் காவலுக்குத் தங்கியுள்ளனர். நள்ளிரவில் தூங்கிவிட்ட நிலையில் அந்த பகுதிக்குள் ஒரு ஒற்றை காட்டு யானை புகுந்துள்ளது. இதனைக் கண்ட முருகனின் மனைவி யானையை விரட்ட முயற்சித்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது தூங்கிக்கொண்டிருந்த 12வது படிக்கும் மகள் சோனியாவை யானை மிதித்ததில் உடல் நசுங்கி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாட்டறம்பள்ளியை ஒட்டியுள்ள தமிழக ஆந்திர எல்லை வனப்பகுதியில் ஒற்றையாகத் திரியும் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.