Tamilnadu

வங்கியில் இந்தி திணிப்பு : தி.மு.க ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலாளர் பணியிடமாற்றம்!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாததால் வங்கிக் கடன் தர மறுத்ததற்கு எதிராக தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வணிக வளாகம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி கிளையில் லோன் கேட்டுச் சென்றுள்ளார்.

அப்போது வங்கி மேலாளர் விஷால் நாராயண் கம்ப்ளே, இந்தி தெரியுமா என்று அவரிடம் கேட்டதற்கு தமிழும், ஆங்கிலமும் தெரியும் என்று மருத்துவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றிப் பேசியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்து வீடு திரும்பிய பாலசுப்பிரமணியன், மொழி பற்றி பேசி கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வங்கி மேலாளரிடம் நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பினார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் வங்கியில், இந்தி தெரியாவிட்டால் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர் உணர்வுடன் விளையாடவேண்டாம் என எச்சரித்தார்.

மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அரியலூர் தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் வங்கிக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் விஷால் நாராயண் கம்ப்ளே திருச்சி பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read: "தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்; சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!