Tamilnadu

மாமூல் கேட்டு அடகு கடைக்காரரை தாக்கிய அ.தி.மு.க பிரமுகர் - சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறிய தமிழகம்?

அ.தி.மு.க ஆட்சியில் ரவுடிகள் அராஜகம் பெருகி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஆளும் அ.தி.மு.க கட்சியின் நிர்வாகிகளே ஈடுபடுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் அடகுக்கடைகாரரிடம் மாமூல் கேட்டு, தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை ஐஸ் ஹவுஸ் லைட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஐஸ் ஹவுஸ் மூர்த்தி.

அ.தி.மு.க பிரமுகரான இவர், டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள அடகுக்கடைக்கு சென்று அடிக்கடி மாமூல் வாங்குவதை வழங்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றை தினம் அடகுக்கடைக்குச் சென்ற மூர்த்தி மாமூல் பணமாக 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கடையின் உரிமையாளரான சுத்ராராம் 200 ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

மாமூல் பணம் 200 ரூபாயை வாங்க மறுத்த மூர்த்தி ஆத்திரமடைந்து சுத்ராராமை தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து, சுத்ராராம் இது தொடர்பாக ஐஸ் அவுஸ் காவல் நிலையத்திற்குச் சென்று மூர்த்தி மீது புகார் அளித்தார்.

சுத்ராராம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, மூர்த்தி மீது பல்வேறு இடங்களில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.முக ஆட்சியில் தமிழகம் சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்: வெடிகுண்டுகளுடன் சிக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு!