Tamilnadu
“அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பமின்றி இறுதி செமஸ்டர் தேர்வு எழுத ஏற்பாடு செய்க”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.
அவ்வாறு மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தேர்வுகளையும் (Mock Exams) 19-09-2020 அன்று நடத்தியிருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ‘ஆன்லைன்’ வாயிலான இறுதித் தேர்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.
மாதிரித் தேர்வின்போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி (Web Camera), தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்யத் தவறி இருக்கிறது. ஒலி அமைப்பும் (Audio System) சரியாக வேலை செய்யாது இருந்திருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே (Log in) இயலாமல் போயிருக்கின்றது.
இதன் விளைவாகப் பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும்கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவுசெய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளைக் களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரித் தேர்வினைப் பிரச்சினைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித் தேர்வுகளை நடத்திட வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளருக்குப் பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆயினும், மாதிரித் தேர்வை அன்றைய தினம் எழுதாத மாணவர்களுக்கு மட்டுமே மற்றொரு மாதிரித் தேர்வு நடத்தப்படும் எனத் தேர்வுத்துறை தெரிவித்து இருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மாதிரித் தேர்வுகளிலேயே இவ்வளவு குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதித் தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் எழுத முடியும் என்ற மனக்குழப்பமும், பெரும் பதற்றமும் மாணவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இதன் வாயிலாகத் தங்கள் தேர்வு முடிவுகளில் ஏற்படக்கூடிய பாதகமான சூழல், தங்கள் எதிர்காலத்தையே பாழ்படுத்திவிடக் கூடும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உறைந்து போய் உள்ளனர்.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!