Tamilnadu

“பால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அரசு, 6 பேர் உயிரை காக்க நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் பாதை இயக்கம் நடத்தும் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 6வது நாளாகப் போராடும் போராட்டக்காரர்களுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்த உதயநிதி ஸ்டாலினிடம், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளைக் கூறினர்.

போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை எனக் கூறிய அவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மக்கள் பாதை இயக்கத்தினர் 6 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வால் 13 மாணவச் செல்வங்களை பறிகொடுத்துள்ளோம்.

போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்த வக்கற்ற அரசாக, பா.ஜ.க அரசு கொண்டுவரும் சட்டங்களை கண்ணைமூடி ஆதரிக்கும் அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க தலைவர் அறிவித்தபடி தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த முயன்றார். ஓ.பன்னீர்செல்வத்தால் செய்யமுடிந்ததை நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் செய்யமுடியாதா?

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இப்போது அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. அவர்களால் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் வலுவாக குரல் எழுப்பவில்லை.

ஆளுமைத்திறனற்ற அரசால் நாம் அவதிப்பட்டு வருகிறோம். மக்கள் பாதை போராட்டத்திற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

முதுகெலும்பற்ற அடிமை அ.தி.மு.க அரசு நீட் தேர்வை தடுக்க மறுக்கிறது. தனிநபர் ஒருவருக்கு பால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க அரசு நீட் தேர்வை தடுக்கவும், போராடும் ஆறு பேர் உயிரைக் காக்கவும் நடவடிக்கை எடுக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: #NEET : “மக்கள் பாதை போராட்டத்திற்கு ஆதரவு : சாகும்வரை உண்ணாவிரதம் வேண்டாம்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!