Tamilnadu
இளைஞரை காரில் கடத்தி கொலை - அ.தி.மு.க பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு!
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் செல்வன் (30). இவருக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரது மகனும் அதிமுக பிரமுகருமான திருமணவேல் என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கறிஞரை சந்தித்து விட்டு உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வனை சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து செல்வன் மர்மமான முறையில் தட்டார்மடம் அருகே உள்ள கடக்குளம் காட்டுப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஷ் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வன் உடலை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வனின் உறவினர்கள் இந்த மர்மமான மரணத்திற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் முழு உடந்தையாக இருந்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளனர். நீண்ட நேரமாக செல்வனின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே, செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !