Tamilnadu

NEET வழிகாட்டு நெறிமுறைகளில் குளறுபடி: உணவருந்த முடியாமல் தவிக்கும் தேர்வர்கள் -பெற்றோர்கள் குற்றச்சாட்டு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்காக தற்பொழுது மாணவ மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் தேர்வுக்கு காலை 11 மணிக்கு மாணவ, மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 11 மணி முதல் 5 மணி வரை அதாவது கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் மாணவ மாணவிகள் உணவருந்தாமல் இருக்கக்கூடிய சூழல் உள்ளது. தற்போது தேர்வு நடைபெறும் மையத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உணவுக்கு அனுமதி என சற்று முன்னரே தெரிவித்தனர்.

Also Read: “8 மாதம் பொறுத்திருங்கள்; தி.மு.க ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்” - மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி!

இதனால் மாணவ, மாணவிகளுக்கு உணவு கொண்டு வராத பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர். இதன் காரணமாக அதிகாரிகள் மீது பெற்றோர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். முன்னதாகவே கூறியிருந்தால் மாணவர்களுக்கு உணவை தயார் செய்து கொண்டு வந்து இருப்போம் எனவும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றிக்கொண்டே இருப்பது போல் இந்த முறையும் தேர்வு சமயத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர, மழையும் பெய்து வருவதால் 11மணிக்கு உள்ளே அனுப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் வரை வெளியே காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆகையால், மழையில் நனைந்து கொண்டு எப்படி தேர்வை மாணவர்கள் எதிர் கொள்வார் என்றும் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

Also Read: NEET: சமூகத்தின் சமநிலை தவறும் போது, சகலமும் அவலமாகும்; உரிமை காக்கப் போராடுவதே கடமை - உறியடி விஜயகுமார்