Tamilnadu
“சிகிச்சைக்கு பணம் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டார்” - வடிவேல் பாலாஜி மறைவு குறித்த அதிர்ச்சி தகவல்!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நகைச்சுவையில் கலக்கிய வடிவேல் பாலாஜியின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடிவேல் பாலாஜிக்கு மனைவி, ஒரு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிணவறையில் வேலை செய்து, பல கஷ்டங்களை கடந்து புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி, வடிவேலு பாணியையும், உடல் மொழியையும் பின்பற்றி தொடர்ந்து நடித்து புகழ்பெற்றதால் ‘வடிவேலு பாலாஜி’ என அழைக்கப்பட்டு வந்தார்.
1991ஆம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் வடிவேலு பாலாஜி. கடைசியாக நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடைய கை கால்கள் செயலிழந்ததால் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அதிக செலவானதால், சிகிச்சைக்கு போதிய பணமில்லாமல் அவதிப்பட்ட அவரது குடும்பத்தினர் அவரை சென்னை வடபழனியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கும் மருத்துவ செலவு கட்டுப்படியாகததால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அங்கு கொரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பியிருந்ததனால் இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் வடிவேல் பாலாஜி. ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
தனது நகைச்சுவை திறமையால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய வடிவேல் பாலாஜி, மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி இறுதிக்கட்டத்தில் அவதியுற்று உயிரிழந்தது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?