Tamilnadu

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு - ஜி.எஸ்.டி அலுவலக உதவி ஆணையர் புகார்!

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தியை திணிப்பதாக ஜி.எஸ்.டி அலுவலக உதவி ஆணையர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் ஜி.எஸ்.டி உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார் பாலமுருகன். இவர் இந்தி திணிப்பு குறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தி பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்களும் இந்தியில் இருக்கவேண்டும் என்பது சட்ட விதி. குறைந்தபட்சம் 50 விழுக்காடாவது இந்தியில் இருக்க வேண்டும்.

உதவி ஆணையரான எனக்கோ, கண்காணிப்பாளருக்கோ இந்தி எழுதப் படிக்கத் தெரியாது. இந்தி பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளுமே இந்தி எழுதப் படிக்கத் தெரியாத தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

ஆணையர் அலுவலகத்தில் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு உதவி ஆணையர் பணியில் உள்ளார். இந்தி பிரிவு பணியை அவருக்கு ஒதுக்காமல் எனது தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு எனக்கு ஒதுக்கியுள்ளனர்.

இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே. இந்தி பிரிவில் சேர விருப்பமுள்ளவர்களையே இப்பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

பா.ஜ.க அரசு இந்தி திணிப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவர் இவ்வாறு புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #ஹிந்தி_தெரியாது_போடா : இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் தெறிக்கும் மீம்ஸ்!