Tamilnadu
முன்னோடி மாநிலம் என தம்பட்டம் அடிப்பதை நிறுத்தி இனியாவது ஆக்கபூர்வமாக செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?
மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் - 2019ன் அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்து பதினான்காவது இடத்தையே பெற்றிருப்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் - 2019 அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச் சாளர அனுமதி எனப் பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழகம் பதினான்காவது இடத்தில் உள்ளது. ஆந்திர மாநிலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தரவரிசைப் பட்டியலை டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தொழில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு பன்னிரண்டாவது இடத்தில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலைப் பொறுத்தவரை மத்திய அரசே வெளியிடுவதன் மூலம் மாநிலங்களிடையே தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளையும், தொழில் தொடங்க எளிதாக அனுமதி வழங்குவதிலும், போட்டித் தன்மையை வளர்த்து, முதலீடுகளை அதிகமாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
இந்த வகையில் முதல் பத்து மாநிலங்களில் கூட இடம்பெற முடியாமல் தமிழகம் பதினான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது பல்வேறு நிலைகளில் முதலீடுகளைப் பாதிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலைப் பார்க்கிறபோது முதலீடு செய்பவர்கள் ஆந்திர மாநிலத்திற்குச் செல்வார்களேயொழிய தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு முதலீடுகள் குவிந்து, வேலைவாய்ப்புகள் பெருகியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் 304 நிறுவனங்களோடு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு பெறப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்த 63 திட்டங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி முதலீடும், 83 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்ததாக அறிவித்தார். அடுத்த கட்டமாக 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 31,464 கோடி முதலீட்டால் 69,712 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவித்தார்.
அவரது அறிவிப்பின் படி 1 லட்சத்து 53 ஆயிரத்து 12 பேருக்கு மொத்தம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால், எளிதாகத் தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் பதினான்காவது இடத்தில் இருக்கிற தமிழகம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின் படி மொத்தம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்து 895 கோடி முதலீடுகள் பெற்றிருக்கிறது.
தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற முதலீட்டுத் தொகைக்கும், வேலைவாய்ப்பு எண்ணிக்கைக்கும் என்ன அடிப்படை ஆதாரம் என்று எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அறிவிப்புகள் எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றன. எந்த இடத்தில், எந்தத் தொழிற்சாலையில், எத்தனை பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்ற தகவலை தமிழக அரசின் இணையதளத்தில் உடனே வெளியிடவேண்டும். முதல்வரின் அறிவிப்புகளுக்கும், கள நிலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கொரோனா தொற்றினால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் நலிவடைந்து, வேலை வாய்ப்புகள் இழந்து, பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் வெளிப்படுகிற அறிவிப்புகள் எவையுமே நம்பக்கூடியதாக இல்லை. இவை வெறும் கண்துடைப்பு அறிவிப்புகளாகவே கருத்தப்பட வேண்டியிருக்கிறது.
நம்மால் காணமுடியாத ஒன்றை நமது முதல்வர் கற்பனையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். எதார்த்த நிலைக்கும், முதல்வர் அறிவிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் 66.37 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இதில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 12.50 லட்சம் பேர். 19 முதல் 23 வயதுவரை உள்ளோர் 17.46 லட்சம் பேர். 24 முதல் 35 வயது உள்ளவர்கள் 24.55 லட்சம் பேர் என்று வேலைவாய்ப்பு பதிவு அலுவலகக் குறிப்பு கூறுகிறது. தமிழக அரசின் வேலையில்லாத் திண்டாட்டத்தை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகமே புள்ளிவிவரங்களோடு உறுதி செய்கிறது.
இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் காரணம் காட்டி முதலீடு குவிந்ததாகவோ, வேலைவாய்ப்பு பெருகியதாகவோ கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நம்பவும் மாட்டார்கள். ஏனெனில் மத்திய அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை தமிழக முதல்வர் ஆய்வு செய்யவேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!