Tamilnadu
ராமநாதபுரம் கொலைக்கு மதச்சாயம் பூசிய ஹெச்.ராஜாவை எச்சரித்த எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசுடன் இணக்கத்தை கடைபிடிப்பதாகக்கூறி, பா.ஜ.க கட்சியுடன் ஆன இணக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதிலும் ஒருபடி மேலச்சென்று, பா.ஜ.கவின் ‘பி’ பிரிவு போல தற்போது செயல்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க திட்டமிட்டும் பா.ஜ.க, மத கலவரத்தையும், மக்களிடையே மத வன்முறையை தூண்டு விடும் வேளைகளை அவ்வபோது செய்து வருகிறது. ஆனால், பா.ஜ.க-வினரின் இத்தகைய வன்முறை அரசியல் வெளிப்படையாக தெரிந்தபோதும் கூட, பா.ஜ.க ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க அரசு தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கூட ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கில் மதச் சாயம் பூசி வன்முறையை தூண்டிவிட நினைத்த பா.ஜ.க-வில் சதியை, தோலுரித்த எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுவாமிநாதனின் மகன் அருண் பிரகாஷ். இவர் தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் அருண் பிரகாஷ், கடந்த 31ம் தேதி திங்கட்கிழமை மாலையில் அவருடன் பணியாற்றும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரனை சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அருண் பிரகாஷையும், யோகேஸ்வரனையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டியதில் அவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலிஸார், கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பதைப் பற்றி, அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த கொலை வழக்கை கையில் எடுத்த பா.ஜ.க, “இது மத பயங்கிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை” என அருண் கொலை வழக்கிற்கு மதச் சாயம் பூசத் தொடங்கினர்.
குறிப்பாக, இந்த பிரச்சனையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட்(எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவர்களால் தாக்கப்பட்ட யோகேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என மதத்தை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன், யூட்யூபர் மாரிதாஸ் என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள் இந்த கொலைக்கு மதச் சாயம் பூசி பதிவிட்டு மதக் கலவரத்தை ஏற்பட்டத்த முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க தலைவர்களின் இந்த வன்முறையைத் தூண்டும் கருத்து சமூக வலைதளங்களில் அதிகம் பரவியதையடுத்து, ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல்துறை, “ராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31ஆம் தேதியன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்னை ஏதுமில்லை” என்று அறிவித்தது.
இந்த உடனடி அறிவிப்புகள் மூலம், ஒரு கொலை வழக்கிற்கு மத சாயம் பூசி வன்முறையை தூண்ட நினைத்தவர்கள் சதி முறியடிக்கப்பட்டதாக பலரும் பாராட்டி வந்தனர். மேலும், எஸ்.பி வருண்குமார் தலைமையிலான போலிஸார் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய, பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று தமிழகத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் உள்ளிட்ட 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், சென்னை பூக்கடை துணை கமிஷனராக இருந்த கார்த்திக், ராமநாதபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த ஆர்.வி.வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது வருகிறது. பா.ஜ.கவின் ஊதுகுழலாக தமிழக அரசு மாறிவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?