Tamilnadu

“UGC விதிகளுக்கு எதிரானது அரியர் தேர்வு ரத்து அறிவிப்பு” - தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார்.

தமிழக உயர் கல்வித்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில், UGC விதிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உயர் கல்வித்துறை செயலாளருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும் ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏப்ரல் 27ஆம் தேதி UGC தேர்வுகள் தொடர்பாக விதிமுறைகளை புறக்கணிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

தனித் தேர்வர்களுக்கான தேர்வை அறிவித்துவிட்டு, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை அறிவிப்பது என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கலை, அறிவியல், டிப்ளமோ, இன்ஜினியரிங், எம்.சி.ஏ. படிப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாகவும், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியோருக்கு பாகுபாடு காண்பிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அரியர் தேர்வுகளை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தலாமே தவிர ரத்து செய்ய முடியாது என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதாமல் ஆகஸ்ட் 26 பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், UGC வழிகாட்டுதளின் படி அரியர் தேர்வுகளை எழுத வேண்டுமென உத்தரவிட வேண்டும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பள்ளி, கல்லூரிகளில் படித்திருந்தால் சட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம் - திருத்தம் கொண்டுவர ஐகோர்ட் பரிந்துரை