Tamilnadu

“பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்? சமூக நீதியின் மாண்பே தடைபடும்” - சி.பி.ஐ வலியுறுத்தல்!

அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில்லை என்ற புகாருக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.

ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் இடஒதுக்கீடு கடைப்பிடிப்பதில்லை. இதற்கான சட்டப்பூர்வ வழிவகைகள் செய்யப்படவில்லை என்பதால், பணிமூப்பு மற்றும் பணி உயர்வு வழங்கல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள், சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. இதனை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செல்லாது என அறிவித்தன.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவும் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு மன்றம், சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு, பாதிக்கப்படுவர். இதனால் சமூக நீதி வழங்கலின் நோக்கம் முழுமையடையாமல் தடைபட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்து, பணி மூப்பு மற்றும் பணியுயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ வழிவகை செய்யவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதுடன், தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும், தமிழக மக்களின் கருத்தைத் திரட்டி மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ‘நீட்’ செல்லாது என்பதற்கு இதுவொரு முன்னோட்டம்” - இட ஒதுக்கீடு வழக்கு தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!