Tamilnadu
“கட்டணத்தை செலுத்த அண்ணா பல்கலை. 3 நாள் கெடு விதித்திருப்பது மனிதநேயமற்றது” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"கொரோனா பேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு - செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் மூன்று நாள் - ஏழு நாள் எனக் கெடு விதித்திருப்பது இதயமற்ற செயலாகும். இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தணியாது பெருகிக் கொண்டிருக்கிறது. பல வகைத் தளர்வுகளோடு ஊரடங்கு 30.09.2020 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் “பொறியியல் கல்வி பயிலும் (B.E/M.E) மாணவர்கள் மற்றும் எம்.எஸ்.சி மாணவர்கள் 3.9.2020-ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தைச் (ODD SEMESTER) செலுத்த வேண்டும்” என்றும்- “அவ்வாறு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டி, 7.9.2020-க்குள் அவர்களை நீக்கிவிட வேண்டும்” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மனித நேயமற்றது; கண்டனத்திற்குரியது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்; குடும்பங்களில் பலர் வேலை இழந்திருக்கிறார்கள்; சிறு, குறு தொழில்கள் கடும் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு, மாணவர்களையும் பெற்றோர்களையும் கடுமையான மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது; பலர் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வியையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.
பேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு - கல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள “மூன்று நாள் கெடு”, “ஏழு நாள் கெடு” என்பவை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், ஊரடங்கு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் அவர்களின் சோகமயமான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் இதயமற்ற செயலாகவுமே எண்ணிட வேண்டியிருக்கிறது.
ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அவர்கள், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று; 3.9.2020 வரை விதித்துள்ள கெடுவை, இந்த மாத இறுதி வரை நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் பழனிசாமியும் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, மாணவர்கள் நலன் காத்திடத் தாமதமின்றி முன் வர வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் - சம்பந்தப்பட்ட செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் விடுத்த வேண்டுகோள் குறித்து முதலமைச்சர் இன்னும் மவுனம் காத்துவருவது கவலையளிக்கிறது. அதுகுறித்தும் உடனடியாக முடிவு செய்து - பேரிடர் காலத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த மாணவர்கள் தொடர்பான அறிவிப்பினையும் முதலமைச்சர் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !