Tamilnadu

“100% தேர்ச்சிக்காக மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதை அனுமதிக்கக் கூடாது” : தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

பள்ளிகளி 100 சதவிகித தேர்ச்சிக்காக மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதை அனுமதிக்கக் கூடாது என விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “100% சதவிகித தேர்ச்சி!, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால், அதை அடைய பல பள்ளிகள் மேற்கொள்ளும் நடைமுறைகள் கண்டிக்கப்பட வேண்டியதாக மட்டுமல்ல; உரிய நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியதாயும் இருக்கின்றது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாகத் தங்கள் பள்ளி வரவேண்டும் என்பதற்காக, சுமாராகப் படிக்கும் மாணவர்களை ஒன்பதாம் வகுப்பிலேயே வடிகட்டும் நடைமுறைக்குப் பரவலாகக் கண்டனம் வலுத்ததின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் பள்ளிகள் மீது ஒரு கண்காணிப்பு ஏற்பட்டது.

இதிலிருந்து தப்புவதற்கு ஒரு குறுக்கு வழியை இவர்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். சுமாராகப் படிக்கும் மாணவர்களைப் பத்தாம் வகுப்பு சேர்க்கும்போது, “சமர்த்தாக” அனுமதித்துவிடுகின்றார்கள். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளைக் கூட மெத்தப் ‘பெருந்தன்மையாக’ எழுத அனுமதிக்கின்றார்கள்.

ஆனால், பள்ளியின் மூலம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்து துறைக்கு அனுப்பும் போது மட்டும் இந்த மாணவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அவர்களை எல்லாம் ‘தனித்தேர்வர்களாக (Private Candidates) பதிவு செய்யவைத்து உடனடித் தேர்வுக்கு ( Supplementary Exam) அனுப்புகின்றனர்.

ஏதுமறியாத பெற்றோர்களை அழைத்து கையெழுத்து வாங்குவதாகத்சொல்லி இந்த மாணவர்களுக்குப் பள்ளியில் இருந்தே மாற்றுச் சான்றிதழும் (TC) கொடுத்துத் துரத்துகின்றார்கள். இந்தக் கொடுமை பல பள்ளிகளில் நடைபெறுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், உயரதிகாரிகளும் உடனே தலையிட்டு , தமிழகம் முழுதும் இவ்வாறு பள்ளிகளில் படித்தும் தனித்தேர்வர்களாக ஆக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதுடன் இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

அதைப் போலவே கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்டுப் பல பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இறுதிப் பொதுத்தேர்வு வரை அனுமதிக்கப்படுகிறார்களா என்பது குறித்தும் சிறப்பு ஆய்வு நடத்த ஆணையிட வேண்டும்.

100 சதவிகிதம் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதை ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்க பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செய்வார்களா?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெறச்செய்க.. அவர்களின் உயர்கல்வியும் முக்கியம் - தங்கம் தென்னரசு வேண்டுகோள்!