Tamilnadu

நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் : சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை!

பல்லாவரம் அருகே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததை அடுத்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் துரை. அவரது மனைவி லலிதா. இவர்களது மகன் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் (42) வாட்டர்கேன் சப்ளை செய்து வருபவர்.

அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனை தரப்பில் 35 ஆயிரம் ரூபாயை முதலில் கட்டவேண்டும் என கூறியுள்ளனர். அல்போன்ஸ் ஆரோக்கிய ராஜின் சகோதரர் முதல் தவணையாக 24 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையிலிருந்து போன் செய்து அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து விட்டதாக அவரின் சகோதரரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன் திரண்டு இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த பல்லாவரம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலிஸார் தெரிவித்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக உடலை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “உணவின்றி வறுமையில் வாடிய நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை” : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!