Tamilnadu
9 ஆண்டுகளாக கிடப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணி: நெடிய தூக்கத்தில் மூழ்கிய கோவை மாநகராட்சி!
நெடிய தூக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம் , பொதுமக்களின் நலன் கருதி கடந்த 9 ஆண்டுகளாக , ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தி.மு.கழக ஆட்சியில், முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் , அன்றைய துணை முதலமைச்சராக இருந்த மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 377 கோடி நிதி ஒதுக்கி, பாதாள சாக்கடை கட்டுமான பணிகளை மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதற்கு பிறகு வந்த அ. தி. மு. க ஆட்சியில் , சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் , கழிவுநீர் குழாய்கள் பதித்தல், ஆள்நுழைவு வழி அமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், கழிவுநீர் அகற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைத்தல் உள்ளிட்ட பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் , கடந்த 9 ஆண்டு காலமாக முடிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது.
அப்பணிகள் மோசமான நிலையில் , தரமின்றி, கோவை மாகராட்சியில் உள்ள எந்த ஒரு அதிகாரியும் ஆய்வு செய்து மேற்பார்வையிடாமல், கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கட்டுமானப் பணிகள் தரமில்லாமல் , முறையாக குழாய் மற்றும் கான்கிரீட் அமைக்காமல் உள்ளதால் பல இடங்களில் உள்ள சாலைகளில், குழாய் பதித்த இடங்களில் பெரிய “திடீர்” பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
மேலும், கட்டுமான பணிகள் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகியும் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் மெயின் குழாயுடன், வீட்டு குழாய் இணைப்புகள் கொடுக்காமல் கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படாததால், கழிவு நீர் செல்ல, பல இடங்களில் திறந்த வெளி கழிவுநீர் வாய்க்கால்களை மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். பல இடங்களில் இந்த கழிவு நீர் வாய்க்கால்கள் சரிவர தூர் வாரப்படாததால், மிகுந்த துர்நாற்றத்துடன் , சுகாதார சீர்கேடு ஏற்பட்டு , மக்களுக்கு பலவித மர்மக் காய்ச்சல்கள் பரவ வழி வகுக்கிறது.
மேலும், கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல சாலைகள் , பாதாளச் சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தாறுமாறாக தோண்டப்பட்டு, மிகவும் பழுதடைந்து, பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக, பயனற்ற வகையில் முக்கிய சாலைகள் உள்ளது .
இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் , போக்குவரத்துக்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
பாதாள சாக்கடை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் , இதனால் பழுதடைந்த சாலைகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக புதுப்பித்து தர வேண்டுமென்று மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடத்தில் பலமுறை நேரில் சென்று சந்தித்து, கடிதங்கள் கொடுத்து வலியுறுத்தியும், பலமுறை பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தியும், இப்பணிகள் இன்னும் முடிக்கப்படாத அவல நிலையில் உள்ளது.
ஆகவே நெடிய தூக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம் , மாநகரத்தின் நலன் மற்றும் வளர்ச்சி கருதியும் , பொதுமக்களின் நலன் கருதியும் கடந்த 9 ஆண்டுகளாக , ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!