Tamilnadu
வட்டிப் பணம் கேட்டதால் மூதாட்டியை கொன்று எரித்த நெசவுத் தொழிலாளி - ஊரடங்கில் அதிகரிக்கும் கொலைகள்!
வாங்கிய பணத்திற்கு வட்டி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த மூதாட்டியை நெசவுத் தொழிலாளி ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாராயணசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு கோமதி என்ற மகள் இருக்கிறார். மகள் கோமதி திருமணமாகி சென்றுவிட்டதால், மூதாட்டி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ராஜேஸ்வரி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்ததோடு, கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் பிழைப்பை நடத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் ராஜேஸ்வரியின் வீடு பூட்டி இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஒருவேளை அவர் மகள் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து 4 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மகள் கோமதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தாய் வீட்டிற்குச் சென்ற கோமதி, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜேஸ்வரி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம பொதுமக்கள் உடனடியாக கண்ணமங்கலம் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கண்ணமங்கலம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ராஜேஸ்வரி வட்டிக்கு பணம் கொடுப்பதால், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் யாரேனும் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என போலிஸார் சந்தேகித்தனர். அதன் பேரில் ராஜேஸ்வரியிடம் கடன் பெற்றவர்கள் யார் யாரென விசாரணை நடத்தியபோது, அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இதற்கிடையில் அப்பகுதியைச் சேர்ந்த நகை அடகுக்கடைக்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்குச்சென்று, “தன்னிடம் ஒருவர் நகை அடகு வைப்பதற்காக வந்தார், அவரிடம் நகையை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அந்த நகையில் லேசாக ரத்தக் கறை இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். அதனால் சந்தேகம் எழவே தகவல் தெரிவிப்பதற்காக காவல் நிலையம் வந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
அவரிடம் இருந்து நகைகளை பெற்ற போலிஸார், மூதாட்டியின் மகள் கோமதியை வரவழைத்து, அந்த நகைகள் ராஜாஸ்வரியினுடையது தானா என உறுதிப்படுத்திக்கொண்டனர். அதன்பிறகு நகை அடகு கடைக்காரர் சொன்ன அடையாளங்கள் மற்றும் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, நகையை அடகு வைக்க வந்தது மூதாட்டியிடம் வட்டிக்குப் பணம் வாங்கிய கணேசன் என்பதும், அந்த நகைகளை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவர் சென்னைக்குச் சென்று தலைமறைவாகியிருப்பதும் போலிஸாருக்கு தெரியவந்திருக்கிறது.
அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கணேசனை தனிப்படை போலிஸார் சென்னையில் கைது செய்தனர். பின்னர் கணேசனை கைது செய்த போலிஸார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் மிகவும் நலிவடைந்ததால் வாழ்வாதரம் இன்றி தவித்து வந்த கணேசன், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரியிடம் பெற்ற கடனுக்கு கடந்த 4 மாதங்களாக வட்டி கட்டாமல் இருந்து வந்திருக்கிறார் கணேசன். அதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று பலதடவை கணேசனின் வீட்டிற்கு நேரில் சென்ற ராஜேஸ்வரி, கணேசனையும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த கணேசன் ராஜேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று அங்கு அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் மூதாட்டி தொடர்ந்து தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த கணேசன் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து ராஜேஸ்வரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்த மூதாட்டி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார்.
இதனால் பதறிப்போன கணேசன், அங்கிருந்து கண்ணமங்கலத்திற்கு சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்து மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கழட்டிக்கொண்டு சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, வெளியே வந்து வீட்டை பூட்டுப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மூதாட்டியிடம் கொள்ளையடித்த நகைகளை அடக்குக்கடையில் விற்று அந்தப் பணத்தை வைத்து சென்னைக்குச் சென்று தலைமறைவாகிருந்தது தெரியவந்தது. பின்னர் நெசவு தொழிலாளி கணேசன் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அரசாங்கத்தின் அறிவீன நடவடிக்கைகளால் நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வதும், கொலையாளிகளாக மாறி வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!