Tamilnadu

“அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் பரிசு” : விருதுநகர் தலைமை ஆசிரியரின் புதிய முயற்சி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆண்டுதோறும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ்.

இந்தப் பள்ளியில், 16 மாணவர்கள் படிக்கின்றனர். அதனால், ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு வகுப்பு ஆசிரியர் என மொத்தம் இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அருகில் உள்ள கிராம மக்கள் பல்வேறு சூழ்நிலை காரணமாக தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காமல் இருந்துள்ளனர்.

அவர்களிடம் தலைமை ஆசிரியர் நேரடியாகச் சென்று பேசி, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்தாண்டு புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.6,500 மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் போன் ஒன்றையும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தலைமை ஆசிரியரின் இத்தகைய முயற்சி அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ் அளித்த பேட்டியில், “இந்த கிராமத்தில் 70க்கும் குறைவான குடும்பங்களே உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பனைத்தொழில் செய்து வாழ்க்கையை நடத்துபவர்கள். பலர் குழந்தைகளை பள்ளிகளுக்குகூட அனுப்ப முடியாத பொருளாதார சூழலில் உள்ளனர்.

மேலும் சிலர் கடன் வாங்கி தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்த்து விடுகின்றனர். இங்கு உள்ள தனியார் பள்ளியின் தரத்தைக் காட்டிலும் சிறந்த முறையில் நாங்கள் கல்வி கற்றுத் தருகின்றோம். அதுமட்டுமின்றி மாணவர்களின் குடும்பச் சூழல் காரணமாக, மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்களே செய்து தருகிறோம்.

மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தக கல்வியைத் தாண்டி, நல்லொழுக்கம், யோகா, மூச்சுப்பயிற்சி, பேச்சுப்பயிற்சி, எழுத்துப்பயிற்சி, தலைமைப்பண்பு மற்றும் சேமிப்பு பயிற்சிகளையும் அளிக்கின்றோம்.

இதனைப் பற்றி அறிந்து, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 2 பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்தார்கள். அவர்கள் தினமும் ஆட்டோவில் வந்து போவதற்காக செலவை ஏற்று, எங்கள் சொந்த பணத்தில் ரூ.800ஐ மாதந்தோறும் தருகின்றோம்.

இதற்கும் மேலாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் முதல் நாள் அன்று உண்டியல் கொடுப்போம். மாணவர்கள் வகுப்பறையில் ஒழுக்கம், தன் சுத்தம், வீட்டுப்பாடங்கள், பிழையில்லாமல் எழுதுவது, மனப்பாடம் உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் சரியாகச் செய்தால் அவர்களை பாராட்டி தினமும் ஒரு ரூபாய் கொடுப்பேன். அதனை மாணவர்கள் உண்டியலில் சேர்த்து வைப்பார்கள்.

ஒருவேளை, அந்த நடவடிக்கையில் மாணவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் அதில் இருந்து ஒரு ரூபாய் எடுத்துவிடுவோம். இதனால் மாணவர்கள் செய்யும் அனைத்து பண்பு நடவடிக்கைகளையும் கவனமுடன் செய்கிறார்கள். மேலும் சேமித்த பணத்தை மொத்தமாக வழங்கும்போது, அது மாணவர்களின் வளர்ச்சிக்காக பிற்காலத்தில் பெற்றோருக்கு பயன்படும்.

இரண்டு ஆண்டுளாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மூலம், மாணவர்களிடம் கற்றல் மேம்பாட்டு திறன் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுபோல, மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல திட்டங்கள் உள்ளது. அதனால் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

Also Read: பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!