Tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை: வருவாயை ஈட்ட குடும்பங்களை சீரழிக்கும் அ.தி.மு.க அரசு!

கொரோனா தொற்றுக் காரணமாக தமிழகத்தில் இன்று எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்றைய தினம் கடைவீதிகளிலும், இறைச்சிகடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

அதேவேளையில் டாஸ்மாக் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடியது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கும் வேலையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததன் மூலம் பலர் தங்களது சம்பளத்தை வீடுகளில் கொடுக்காமல் டாஸ்மாக் கடைகளில் கொடுக்கின்றனர். இதனால் பல இடங்களில் குடும்ப வன்முறைகள் அரங்கேறியுள்ளது.

இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் வரம்பின்றி மதுபானம் விற்பனை செய்ததில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.250.25 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 52.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக திருச்சியில் 51.27 கோடியும், சேலத்தில் 49.30 கோடிக்கும், கோவையில் ரூ.46.58 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ50.65 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பல இடங்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், அரசு இதுபோன்ற நேரங்களில் மது பிரியர்களிடம் இருந்து பணத்தைப் பறித்து ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: ஊரடங்கு வாழ்க்கை எதிரொலி : "மது கிடைக்காததால் மனநல பாதிப்புக்குள்ளாகும் குடிப்பிரியர்கள்" - தீர்வு என்ன?