Tamilnadu

மேல்நிலை பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்படும்: தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, கோவையை சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும் எனவும், தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 21ம் தேதி முதல் 26 வரை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வெளியாக ஒரு மாதமாகும். ஆனால், மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: பயன்படுத்திய கையுறைகளை கழுவி விற்ற கும்பல் - அதிர்ச்சி தகவல்!