Tamilnadu

“ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் பணியை மேற்கொள்க” - தமிழக அரசு எடுக்கவேண்டிய 8 முக்கிய நடவடிக்கைகள்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது எனவும் அந்த ஆலைக்கு பூட்டி சீல் வைத்தது சரி என்றும் தீர்ப்பளித்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனக் குறிப்பிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு செய்ய வேண்டியவை என சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவையாவன :

1) தமிழக அமைச்சரவையைக் கூட்டி “தமிழகத்தில் இனிமேல் தாமிர உருக்காலைகளை எங்கும் அனுமதிப்பதில்லை” என்னும் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

2) ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான (Decommissioning) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3) ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4) மன்னார் வளைகுடா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

5) ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய அபராத தொகையை சுற்றுச்சூழலை சீரமைக்க பயன்படுத்த வேண்டும்.

6) தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

7) போராடிய மக்கள் மீதும், செயல்பாட்டாளர்கள் மீதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

8)தமிழகத்தில் செயல்படும் அனைத்து இரசாயன தொழிற்சாலைகளையும் சோதனை செய்து, சூழல் சீர்கேடுகளை களைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

Also Read: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தீர்மானமாக நிறைவேற்றி சட்டமாகவே இயற்றிடுக - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்