Tamilnadu

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு - வழக்கு கடந்து வந்த பாதை!

ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாகக் கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகினர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 பிப்ரவரி 27ல் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கோரிக்கையை எதிர்க்கும் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா, அர்ஜூனன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஹரி ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். 39 நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை

1993ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அடுத்த ஓராண்டில், அதாவது 1994ல் தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

ஆலை அமைந்த பின், அப்பகுதியில் வசித்தவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ல் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 1998ல் நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

1998 நவம்பரில் முதன்முதலாக ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் உச்சநீதிமன்றம், ஆலை இயங்க அனுமதித்தது.

2010 செப்டம்பரில் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

அடுத்த மூன்று நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2013 மார்ச்சில் விஷ வாயு கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஏற்படுத்திய மாசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் இழப்பீடாகவும் 100 கோடி ரூபாயை வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் 2013 ஏப்ரலில் உத்தரவிட்டது.

2018 மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.

அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையைத் திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

2019 பிப்ரவரி 27 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8 ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

Also Read: “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது” :  நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்.