Tamilnadu

சென்னையில் டாஸ்மாக் திறக்கலாம்: “கஜானாவை நிரப்புவதற்காக தாய்மார்களின் கண்ணீரை விலைகேட்கும் எடப்பாடி அரசு”

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 5 மாதங்களாகியும் தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் தொற்று பரவலையும் அதிமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. அதேச்சமயத்தில் ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களையும் சீர் செய்வதற்காக போதுமான திட்டங்களையும் வகுக்கவில்லை.

நாட்கள் இவ்வாறு கழிந்துக் கொண்டிருக்கும் நிலையில், தினந்தோறும் ஆறாயிரத்தை தொடும் பாதிப்பு எண்ணிக்கைகளும், 100 கணக்கானோர் உயிரிழப்பதும் மக்களுக்கு மேன்மேலும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றன.

இப்படி இருக்கையில் நாளை (ஆக.,18) முதல் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் வணிக வளாகங்கள் மற்றும் கொரோனா தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் சில்லறை மதுபானக் கடைகளை திறந்துக்கொள்ளலாம் என்றும், ஒரு நாளுக்கு 500 டோக்கன்கள் வீதமே விற்பனை வழங்கப்படும் என்றும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மதுபான கடைகளுக்கு வரும் அனைவருமே முகக்கவசம் அணிந்துக்கொண்டும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே பேரிடியாக விழுந்துள்ளது. ஏற்கெனவே வேலையில்லாமல் கடுமையான பொருளாதார இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் டாஸ்மாக்கையும் திறந்துவிட்டால் இருக்கும் சில்லறைகளையும் பறிகொடுக்கும் நிலை ஏற்படும் என வேதனைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் கடந்த 5 மாதங்களாக மதுக் குடிக்காத காரணத்தால் பெரும்பாலானோர் மதுக் குடிக்கும் பழக்கத்தையே கைவிட்டிருக்கும் போது தன்னுடைய கஜானாவை நிரப்புவதற்காக அரசே மீண்டும் மதுக்கடைகளை திறப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று குறையாத சூழலில் டாஸ்மாக்கை திறப்பதன் மூலம் மேலும் வைரஸ் பரவல் அதிகமாவதற்கே இந்த அறிவிப்பு வழி வகுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!