Tamilnadu

“ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி இ-பாஸ் வழங்கப்படும்” - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை உள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் இ-பாஸ் நடைமுறையை நீக்கவேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இ-பாஸ் நடைமுறையை நீக்க மறுத்து வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) ஆகஸ்ட் 17 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆளே இல்லாத வீட்டிற்கு தகரம் அடித்து கணக்குக் காட்டும் அரசு?: இ-பாஸ் ஊழலை அடுத்து இதிலும் உண்மை அம்பலம்!