Tamilnadu

“விவசாயிகளுக்கான திட்டங்களில் தொடரும் ஊழல் முறைகேடுகள்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

தமிழக அரசின் வருவாய் நிர்வாக பதிவேட்டை புதிப்பித்து இணையத்தில் புதுப்பிக்காதவரை விவசாயிகளுக்கான திட்டங்களில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது என பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

“பிரதமர் விவசாயிகள் ஊக்கத் திட்டம் ஹெக்டேர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை மூன்று தவணைகளாக பிரித்து வழங்கக்கூடிய திட்டம் இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகம் முழுவதும் 65 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு பிரதமர் உதவி திட்டம் மூலம் 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 40 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு மேல் நேரடியாக விவசாயப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் வேளாண்துறை அறிவித்த 65 இலட்சம் குடும்பங்களுக்கு கூட வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள இந்த நிலையில் தற்போது ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து தமிழக அரசு உயர் மட்டக் குழு விசாரனை நடத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலமாகவும் கூட்டுறவு துறை மூலமாகவும் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் 50 சதவீதத்திற்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

1984 ல் வருவாய் நில பதிவேடுகள் மறுவரையறை செய்யப்பட்டன. அதற்குப் பிறகு தற்போது வரை அதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல விவசாயிகளுக்கு ஒதுக்கப்படுகிற பல திட்டங்களில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கிசான் கார்டு உள்ளோருக்கு மட்டும்தான் கடன் தர முடியும் எனவும், கிசான் கார்டு பெறுவோர் தான் விவசாயிகளாக கணக்கில் கொள்ளப்படுவார்கள் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் இணைய வழியாக அது வழங்கபடும் என அறிவிக்கப்பட்டும் இதுவரையிலும் கிசான் கார்டு வழங்கப்படவில்லை.

ஊழலுக்கே அடிப்படைக் காரணம் தமிழக அரசின் வருவாய் நிர்வாக பதிவேடுகள்தான். இன்றைய நிலைக்கு மறு பதிவேடு செய்து அதனை உடனடியாக இணையதளங்களில் புதுப்பித்தல் செய்யவேண்டும். அதுவரை உண்மையான விவசாயிகள் பயன்பெற முடியாமல் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிதிகளும் ஊழல் முறைகேடுகளுக்கே துணைபுரியும். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு கிசான் கார்டுகளை முறையாக வழங்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “பாதுகாக்கப்பட்ட வேணாண் மண்டலம் வெறும் அறிவிப்பு மட்டும்தானா?” - கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்!