Tamilnadu

கொரோனாவால் பலியான மருத்துவர்களுக்கான குடும்ப நிதி ரூ.25 லட்சமாக குறைப்புக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களின் இறப்புக்கு வழங்கப்படும் குடும்ப இழப்பீடு நிதியை ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக தமிழக அரசு குறைத்தது சரியல்ல. ஏற்கனவே முதல்வர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ரூ. 50 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

• தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த ஏப்ரல் 22 அன்று அறிவித்தார். இது முன்களப் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்தது. ஆனால், தற்பொழுது அதை ரூ. 25 லட்சமாக தமிழக அரசு குறைத்திருப்பது வருத்தமளிக்கிறது. இதனால், முன்களப் பணியாளர்கள் மிகுந்த கவலையும்,வேதனையும் அடைந்துள்ளனர்.

• மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்யும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். எனவே அவர்களது குடும்பத்திற்கான இழப்பீட்டை ரூ. 50 லட்சமாக,ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

• அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

• கொரோனாவால் இறந்த மற்றும் கொரோனா தொடர்பான பணியால் இறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின்,ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

• மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் கொரோனா இறப்புகளை கண்காணிக்க வேண்டியதும் அறிவிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதை தனியார் அமைப்புகளிடம் விடுவது தவறானது. அது பல்வேறு குழப்பங்களுக்கும், பாரபட்சங்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

• ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையில் , கொரோனா உறுதியானால் தான் இழப்பீடு என்பதை மாற்ற வேண்டும்.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈட்பட்டுள்ளவர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களின் இறப்புக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்.

ஏனெனில்,

• கொரோனாவை உறுதி செய்வதற்கான, ஆர்டிபிசிஆர் பரிசோதனையை சரியாக செய்தாலே, அதன் நம்பகத்தன்மை (sensitivity) 70 விழுக்காடு தான். எனவே, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, பல நேரங்களில் தொற்று இல்லை என முடிவுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா மரணங்கள் கூட கொரோனா அல்லாத மரணங்கள் என முடிவு செய்யப்பட்டு விடுகின்றன. இது அறிவியலுக்குப் புறம்பானாது. இதனால், கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்காமல் போய்விடுகிறது. இது அவர்களது குடும்பத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, ஆர்டிபிசிஆர் முடிவுகளை வைத்து மட்டும் கொரோனாவை உறுதி செய்வது சரியல்ல.

• கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெஞ்சு சி.டி ஸ்கேன் பரிசோதனையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான பிரத்தியேக அறிகுறிகள், மாற்றங்கள் பெரும்பாலோருக்கு ஏற்படுகின்றன. அவர்களில், சிலருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துவிடுகிறது. எனவே, கொரோனா பாதிப்பை உறுதி செய்ய, நெஞ்சு சிடி ஸ்கேன் பரிசோதனையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

• முன்களப் பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு கொரோனாவிற்கான ஆர்டிபிசிஆர், ரேப்பிட் ஆன்டிஜன் மற்றும் ரேப்பிட் ஆன்டிபாடி பரிசோதனைகளை கட்டாயம் செய்திட வேண்டும். அவர்கள் இறக்கும் பட்சத்தில் , இறப்பிற்கு பின்பும் அந்த பரிசோதனைகளை தவறாமல் கட்டாயம் செய்திட வேண்டும்.

• கொரோனா, இதய மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. மாரடைப்பு, ,நுரையீரல் இரத்தக்குழாய் இரத்தக்கட்டி, அதீத இதயத்துடிப்பு, பக்கவாதம் ,மூளைக்காய்ச்சல் போன்ற வகைகளிலும் கோவிட் நோய் வெளிப்படுகிறது.இந்த அறிவியல் உண்மையையும் மத்திய மாநில அரசுகள் ஏற்க வேண்டும். அறிவியல் நிபுணர்குழுவின் ஆலோசனை அடிப்படையில் மேற்கண்டவற்றை கொரோனா மரணம் என வரையறுக்க வேண்டும். அதன் அடிப்படையில், மேற்கண்ட முறையில் இறப்பவர்களுக்கும் இழப்பீடுகளை வழங்கிட வேண்டும்.

Also Read: “இப்போதாவது கொரோனாவால் பலியான மருத்துவர்கள் எத்தனை பேர் என்பதை அறிவிப்பீர்களா?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

• மேலும், கடுமையான பணிச்சுமையால் பலர் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இறக்கின்றனர். எனவே,கொரானா கால மருத்துவப் பணியாளர்களின் இறப்பை கொரோனா தொடர்பான இறப்பாக கருதி இந்த இழப்பீடுகளை வழங்கிட வேண்டும்.

• மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவசங்கள், தனிமைப் படுத்தப்படுவதற்கான தங்கும் வசதிகள், தனிமைப்படுத்தப்படும் நாட்கள், அவர்களுக்கான உணவு போன்றவை முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். கொரோனாத் தொற்று ஏற்படுதல், பாதிப்புகள், இறப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிக்குழுவை நியமிக்க வேண்டும். ஏற்கனவே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பல முறை இதை வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசு இதுவரை அதை அமைக்கவில்லை. எனவே, உடனடியாக அக்குழுவை அமைத்திட வேண்டும்.

• மருத்துவத்துறையினருக்கு ஏற்படும் கொரானாத் தொற்று விவரங்கள் பற்றி நாள்தோறும் அரசு அறிவித்து வந்தது.அதை நிறுத்தியது சரியல்ல. அந்த நடைமுறையை மீண்டும் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்திருந்தால், தற்போது எத்தனை மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர் என்ற தகவல் தெரிய வந்திருக்கும். நாள்தோறும் அரசு மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் தொற்று விவரங்களை அறிவிக்க வேண்டும்.

• பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவர்களாக இல்லாத பட்ட மேற்படிப்பு மாணவர்கள், தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த மற்றும் அவுட் சோர்ஸிங் ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோரின் கொரோனா தொடர்பான மரணத்திற்கு இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

• கொரோனா தொற்றுக்கு உள்ளான பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

• பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

• பல நியாயமான கோரிக்கைக்களுக்காக, 25.10.2019 முதல் 31.10.2019 வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு, போராடிய நாட்களுக்கான ஊதியத்தை நிறுத்தியுள்ளது. போராட்ட நாட்களை “சர்வீஸ் பிரேக்’’ என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Also Read: கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? உண்மை புள்ளிவிவரம் எங்கே?- அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கேள்வி!