Tamilnadu
“எனது வாழ்வையே மாற்றிய கலைஞர்” - முதல் தலைமுறை பட்டதாரியின் நன்றி நவிலும் பதிவு!
சமூக நீதி காத்த தலைவர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாகி, தற்போது உலகளாவிய நிறுவனத்தில் பணியில் இருக்கும் திலீப் ராஜேந்திரன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பதிவு பின்வருமாறு :
“முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அதிகமாக நீங்கள் கொண்டாடுவதற்கான காரணம் என்ன?
- என் நட்பு வட்டத்தில் இருக்கும் பெரும்பாலான நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி. சில நிமிடங்களை இந்த பதிவை படிப்பதற்காக செலவிட வேண்டுகிறேன்.
இதற்கான பதில் :
இன்று நான் ஒரு முதல் தலைமுறை பி.டெக் (B.Tech) பட்டதாரி ஆனது கலைஞர் அவர்களால் தான். 12-ஆம் வகுப்பிற்கு பின் இரண்டாண்டுகள் ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்து ஏறக்குறைய 3 ஆண்டுகள் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தேன்.
2007-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மருத்துவம்/பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். அந்த வருடம் என்னுடன் ஆசிரியர் பயிற்சி படித்த நண்பர்கள் கௌதமன் மற்றும் தியானம் ஆகியோர் முறையே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத்தேர்வின்றி சேர்ந்தனர்.
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டுதான், ஏன் நம்மாலும் பொறியியல் படிக்க இயலாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. 2008 -ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் மூலம் B.Tech படிப்பில் சேர்ந்தேன்.
எனது பெற்றோர் மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் எப்படியாவது என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். அதற்கு அவர்கள் எனக்கு மிகுந்த உறுதுணையாகவும், ஆதரவாகவும் நின்றிருந்தாலும், என்னுடைய கனவுகளுக்கு சட்டங்களின் வாயிலாகவும் பொருளாதார உதவிகளின் வாயிலாகவும் உயிர் கொடுத்தவர் கலைஞர்.
"நுழைவுத் தேர்வு ரத்து", "கலைஞருடைய பங்களிப்பில் நடந்த மத்திய அரசின் மூலம் கல்விக்கடன்", "30% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு (BC Reservation)" மற்றும் "பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை" என்று அனைத்து வகையிலும் அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் தலைவர் கலைஞர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
”நுழைவுத் தேர்வு ரத்தும் -கல்விக்கடனும்” இல்லாவிடில் பொறியியல் படிப்பு என்பது எனக்கெல்லாம் வெறும் கனவாக மட்டுமே இருந்திருக்கும்.
ஒரு சிறிய கிராமத்தில், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்து ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த நான் படிப்பை முடித்து இன்று உலகின் மிகச்சிறந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன் என்றால் அதற்கான முக்கிய காரணம் தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதித் திட்டங்கள்தான். என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தனது சமூகநீதி பார்வையில் கல்வியை நெருக்கத்தில் தந்தவர் டாக்டர் கலைஞர்.
முத்தமிழறிஞர் கலைஞர், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மிகக்கடுமையாக களமாடினார். அவருடைய பகுத்தறிவு மற்றும் சமூக நீதி சார்ந்த கொள்கைகளை ஏற்க முடியாத ஆதிக்க வர்க்கங்களின் கைகளில் இருந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக மக்கள் மனதில் கலைஞர் வெறுப்பை விதைக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
அவர் இருந்த வரையும், இறந்த பிறகும், ஏன்- இன்றளவும் கூட செய்து வருகின்றனர் என்பதே நிதர்சனம் .
1957 -2018 வருடம் வரை 61 ஆண்டு அரசியல் காலகட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யாத நிலையில் அவரைத் தொடர்ந்து ஊழல்வாதி என்று வலதுசாரி ஊடகங்களும் பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளும் கட்டமைப்பதற்கான காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இருந்த கல்வியை, வேலைவாய்ப்பை தனது சமூகநீதி திட்டங்கள் மூலமாக அனைத்து சமூகத்தினருக்கும் கிடைக்க செய்ததால் ஏற்பட்ட வன்மத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை.
தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல் சாணக்கியர் மட்டுமல்ல கல்வி கட்டமைப்பு, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், அனைவருக்குமான சிறந்த மருத்துவ வசதி, விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு என தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்றிய நவீன தமிழகத்தின் தந்தை. மாநில உரிமைகளுக்காக, தாய்மொழி பாதுகாப்புக்காக தலைவர் கலைஞர் அவர்களின் சமரசமற்ற சேவை இந்திய மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்றே கூற வேண்டும்.
நம் மாநிலத்தின் ஒவ்வொரு தெருவுக்குச் சென்றாலும் தலைவர் கலைஞர் அவர்களின் திட்டத்தால் பயனடைந்தோர் என கட்டாயம் ஒருவராவது இருப்பார்.
எங்கோ ஒரு முதல் தலைமுறை பட்டதாரி! எங்கோ ஒரு கலைஞர் காப்பீடு பயனாளி! எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி! எங்கோ ஓர் உழவர் சந்தை பயனாளி ! எங்கோ ஒரு பயன்பெற்ற கைம்பெண்! எங்கோ ஓர் அங்கீகாரம் கிடைத்திட்ட திருநங்கை, எங்கோ ஓர் ஊனம் மறந்த மாற்றுத்திறனாளி என்று இவர்கள் யாவருமே தலைவர் கலைஞர் அவர்களை தமிழகத்தில் இன்றும் வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
அந்த வகையில் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் அவரை நன்றியுடன் நினைவுகூரும் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி நான்!
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!