Tamilnadu

பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கித் தராததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

அதுமட்டுமின்றி, ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவது போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஊரடங்கு நாட்களை கழிப்பதற்கு உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர்.

மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.

இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளன இது போன்ற விளையாட்டுகள்.

அவ்வகையில், திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் தினேஷ் குமார் என்பவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்புக்கு படித்து வருகின்றான். இந்நிலையில் கடந்த 4ம் தேதி, ஆன்லைன் வகுப்புக்கு புத்தகம் வாங்குவதற்கு தினேஷ் பள்ளிக்குச் சென்றுள்ளான்.

அங்கு வந்த தினேஷ் நண்பர்கள் பலரும் கையில் செல்போனுடன் பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது தனக்கும் கேம் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும், சிறிது நேரம் செல்போனைத் தரும் படி தனது நண்பர்களிடம் கேட்டுள்ளான். ஆனால், யாரும் நண்பர்கள் செல்போனைத் தரமறுக்கவே சோகத்துடன் வீடுத் திரும்புள்ளான்.

இந்நிலையில், வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் தனக்கு செல்போன் வாங்கித்தரும் படி தினேஷ் கேட்டுள்ளான். ஆனால் பொருளாதார சூழல் காரணமாக சில நாட்களுக்குப் பிறகு வாங்கித் தருவதாக பெற்றோர்கள் தினேஷிடம் கூறி அவனை சமாதானம் செய்துவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

இதனயடுத்து செல்போன் வாங்கி தராத மன உளைச்சலில் இருந்த தினேஷ், வீட்டில் யாரும் இல்லாதப் போது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த போலிஸார், சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், சிறுவனின் மரணத்திற்கு பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கித்தராததுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Also Read: தொடர்ந்து ‘பப்ஜி’ கேம் விளையாடிய இளைஞருக்கு மாரடைப்பு - விபரீதம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!