Tamilnadu
வேளாண் மண்டலத்திலிருந்து எடுக்கப்படும் மணல் தனியாருக்கு விற்கப்படுகிறதா? - அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “காவிரி டெல்டா மாவட்டங்கள் அரிசி விவசாயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது விவசாயத்திற்கு எதிரான வேலைகள் இந்த மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்னையாக சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருட்டு மற்றும் அனுமதி பெற்று மணல் அள்ளுவது இருந்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள பூதலூர் தாலுகாவில் சுக்கம்பர், கோவில்ஆடி, களபெரம்பலூர், விண்ணமங்கலம், ஒரத்தூர் மற்றும் திருவையாறு தாலுகாவில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை வருவாய் மற்றும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை.
பூதலூர் தாலுகாவில் உள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியில் அரசு அளித்துள்ள விதிகளை மீறி பல இடங்களில் அதிக அளவு ஆழங்களில் தோண்டப்படுகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அறிவிக்கப்பட்ட இடங்களில் மணல் அதிக அளவில் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்கு அதிகளவு சோதனைச் சாவடிகள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மணல் குவாரிகள் செயல்படுவதற்கான தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேளாண் மண்டலங்கள் தொடர்பாக விதிகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில், வேளாண் மண்டலங்கள் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வேளாண் மண்டலங்களில் எடுக்கப்படும் மணல் அரசு கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா, அல்லது விற்பனை செய்யப்படுகிறதா?
விற்பனை செய்தால், ஒரு யூனிட் மணல் எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி?
இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!