Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கன & மிதமான மழைக்கு வாய்ப்பு - தமிழக வானிலை நிலவரம்!

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவில் அதி கன மழையும், கோவை தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி 39 செ.மீ, மேல்பவானி 31 செ.மீ, கோவை சோலையாரில் 18 செ.மீ, சின்னக்கல்லார்,பந்தலூரில் தலா 16 செ.மீ, நீலகிரி நடுவட்டம் , எமரால்டு பகுதிகளில் தலா 15 செ.மீ, நீலகிரி மாவட்டம் கிளோன்மோர்கன் , ஹாரிசன் எஸ்டேட் 14 செ.மீ, கூடலூர் பஜார், தேவாலா தலா 13 செ,மீ, கோவை சின்கோனா, நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட் தலா 11 செ.மீ, தேனி மாவட்டம் பெரியார் 10 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை 9 செ.மீ, நீலகிரி மாவட்டம் குந்தா பிரிட்ஜ் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், மத்திய மற்றும் தெற்கு வங்ககடல் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 9 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு, மாலத்தீவு மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், தென்மேற்கு , மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு..

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 4.1 மீட்டர் வரை எழும்பக்கூடும்.